“தமிழகத்தில் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை; அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்” - ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. இப்படி இருந்தால் அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது; இது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக சீரழித்துவிடும்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1,000 ஆசிரியர் நியமிக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது கூடுதலாக 500 ஆசிரியர்களை சேர்த்து 1,500 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது 500 ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அரசு பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களில் ஒரு விழுக்காட்டினரைக் கூட நியமிக்க தமிழக அரசு தயாராக இல்லை என்பது தான் உண்மையாகும்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. இந்த காலத்தில் குறைந்தது 20,000 இடைநிலை ஆசிரியர்களும், 15,000 பட்டதாரி ஆசிரியர்களும் ஓய்வு பெற்றிருப்பர். ஆனால், இந்த விவரங்களை மறைத்து விட்டு 2023 மற்றும் 24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அரசு அறிவித்தது. அதன்படி பார்த்தால் அந்த இடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,553 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று 2022 திசம்பர் மாதத்தில் அரசு அறிவித்தது. ஆனால், 2023 மற்றும் ஆம் ஆண்டு முழுவதும் அந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போது அந்த எண்ணிக்கையையும் குறைத்து 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசு பள்ளிகளை எப்படி முன்னேற்றும்?

இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமல்ல, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே நிலை தான் காணப் படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி 3,587 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அறிவித்த தமிழக அரசு, அந்த இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டே நிரப்பப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத நிலையே உருவாகும்.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளின் காலியிடங்கள் எல்லாம் அரசுத் தரப்பில் காட்டப்படும் கணக்கு தான். உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். அவற்றுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேவை.

தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

கல்வியிலும், மனிதவளத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம். அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது. எனவே, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்