கொடைக்கானலில் பங்களா கட்டியதில் விதிமீறல்; நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்த எஸ்.முகமது ஜூனத், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்கூறியிருப்பதாவது:

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி போத்துப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதிபெறாமல் நவீன பங்களா கட்டிஉள்ளனர். கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு, தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின்படி அனுமதி பெற வேண்டும். மலைப்பகுதிகளில் இயற்கைப் பேரிடர்களைத் தடுக்க, கட்டிட விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் பங்களா கட்டிஉள்ளனர். இது தொடர்பாக புகார்அளித்தாலும், இருவரும் பிரபலமான நடிகர்கள் என்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு: விதிமீறல் கட்டிடங்களால் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும். அனுமதி பெறாமல் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாறைகளை உடைத்துள்ளனர். எனவே, உரிய அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, "பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா பங்களா கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருவர் மீதும்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், இரு நடிகர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 9-க்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE