சென்னை: “வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இல்லங்களில் பொங்கல் திருநாளை ஓரளவு மகிழ்ச்சியுடனாவது கொண்டாட அரசு வழிவகை செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களுடைய பயணங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையே நம்பி உள்ளனர். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற நடைமுறையைக் கொண்டுவந்து தொழிலாளர்களின் நண்பனாகத் திகழ்ந்தார். அதன்படி, அதிமுக ஆட்சியில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 1.9.2016 முதல் 31.8.2019 வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2019 முதல் 2022 வரை ஊதிய உயர்வு ஒப்பந்தம் கரோனா மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தலினால் தள்ளிப்போனது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற நடைமுறையை மாற்றி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்று இந்த திமுக அரசு திருத்தம் செய்து, 2019 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்திற்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 24.8.2022 முதல் ஏற்படுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் விளையாடியது இந்த அரசு.
இதன்படி, ஊதிய ஒப்பந்தத்திற்கான காலம் நான்கு ஆண்டுகள் என்று மாற்றப்பட்டதை, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை மற்றும் 8 கூட்டமைப்பு சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாமல், கையெழுத்திடாமல் தங்களது எதிர்ப்பை இந்த அரசுக்கு வெளிப்படுத்தியது. புதிய ஒப்பந்தப்படி 31.8.2023 அன்று நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அரசிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொழிலாளர் சங்கங்கள் வழங்கியதாகத் தெரிய வருகிறது.
» ‘மத்திய அரசு இதுவரை வெள்ள நிவாரணத் தொகை தரவில்லை’ - அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்திக்க முடிவு
» அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு
எந்த பதிலும் வராததால், போனஸ் மற்றும் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டதாகவும், ஆனால், எந்த பதிலும் அரசிடமிருந்து வராத காரணத்தால், 95 சதவீத தொழிற்சங்கங்கள் 20.12.2023 அன்று 15 நாட்களுக்கான முன்அறிவிப்பு வேலைநிறுத்த நோட்டீஸை அரசிடமும், தொழிலாளர் நலத் துறையிடமும் வழங்கியதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து, 27.12.2023 அன்று நடந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும், போக்குவரத்துக் கழகங்களின் மூன்றாம் கட்ட அதிகாரிகளும் மட்டுமே கலந்துகொண்டதாகவும், எனவே, அனைத்துத் தொழிற்சங்கங்களும் அரசின் இத்தகைய நியாயமற்ற போக்கிற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, 3.1.2024 அன்று உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தையில் ஒய்வு பெற்றோருக்கான பணப் பலன்கள் மற்றும் ஊதிய உயர்வு குறித்து பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள், ஓய்வு பெற்று 96 மாதங்களைக் கடந்த பின்னும் அகவிலைப்படி நிலுவைத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததையும், கடந்த 13 மாதங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பயன்களையும் உடனடியாக இந்த அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாகவும், இந்தக் கோரிக்கைகளையும் அரசு ஏற்றக்கொள்ளாத காரணத்தால் 9.1.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவை, CITU, AITUC, பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை, தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை, தமிழ் மாநில டிரேடு யூனியன் காங்கிரஸ் பேரவை, புரட்சி பாரத தொழிற்சங்கப் பேரவை, பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவை, MLF, INTUC, HMS, TTSF, , திரு.வி.க. தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட 23 தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோருக்கான தொழிற்சங்கங்களும், 9.1.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள் தங்களது பல கோரிக்கைகளில் இரண்டு முக்கிய கோரிக்கைகளான, ஓய்வு பெற்று 13 மாதங்களான தொழிலாளர்களுக்குரிய பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும்; ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான 96 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
எனவே, இந்த திமுக அரசு, உடனடியாக தொழிற்சங்கங்களின் இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இல்லங்களில் பொங்கல் திருநாளை ஓரளவு மகிழ்ச்சியுடனாவது கொண்டாட வழிவகை செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 32 மாதங்கள் ஆகியும், ஒரு புதிய பேருந்தைக்கூட இந்த திமுக அரசு வாங்கவில்லை. ஒரு நபரைக்கூட புதியதாக வேலைக்கு நியமிக்கவில்லை. மேலும், ஏற்கெனவே 15 ஆண்டுகள் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளின் ஆயுட்காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டித்ததுதான் இந்த திமுக அரசின் சாதனை.
புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறதே தவிர, அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்நிலையில், ஏற்கெனவே ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளின் எஞ்சின்களை மாற்றாமல், வெளித் தோற்றத்தை மட்டும் மாற்றியமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது இந்த திமுக அரசு. அப்படி வெளிப்புறத்தை மாற்றிய பல பேருந்துகள் நடுவழியில் நின்றுவிடுவதாகவும், அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குச் சென்று தங்களது நெருங்கிய சொந்த பந்தங்களுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
எங்களது ஆட்சிக் காலத்தில், அகவிலைப்படி நிலுவையினை வழங்குவதற்காக, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு பேசியபோது, உடனடியாக, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் அந்த மாதத்திலிருந்து பென்ஷனுடன் சேர்த்து வழங்குவதாகவும், அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையினை 4 அல்லது 5 தவணைகளில் தருகின்றோம் என்றும் உறுதி அளித்தார்.
ஆனால், அப்போதிருந்த திமுக-வின் தொ.மு.ச. தொழிற்சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே, 2020 முதல் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சுமார் 8 மாதங்கள் பேருந்துகளே இயக்கப்படவில்லை. எனினும் அதிமுக அரசு, தொழிலாளர் நலன் கருதி அனைவருக்கும் முழு சம்பளமும், 2020-ஆம் ஆண்டு தீபாவளிக்கு 10 சதவீத போனசும் வழங்கி தொழிலாளர்களின் நலனைப் பாதுகாத்தது.
2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி எண். 152-ன்படி, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்றும், ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் மேடைதோறும் பேசி, பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று பாதி ஆயுளை தாண்டிவிட்ட நிலையில், எப்போதும்போல் முந்தைய அரசின் மீது வீண் பழிபோட்டுத் தப்பிக்காமல், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, பொதுமக்கள் பண்டிகை காலங்களில் எந்தவிதமான சிரமமுமின்றி தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago