பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் பொங்கலுக்கு பணம் வழங்க கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகுப்புடன் வழக்கம்போல பணமும் வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு அரசாணை நேற்று வெளியானது. இதில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும்முழு கரும்புடன் கூடிய தொகுப்புவழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரொக்கம் ரூ.1000 வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், ரொக்கப் பரிசு வழங்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொங்கல் தொகுப்பாக கடந்த ஆண்டு ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் வெளியாகாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில்,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ரொக்கத் தொகையை தமிழக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. வெள்ள நிவாரணம் ரூ.6000, மகளிருக்கான ரூ.1000 மாத உரிமைத் தொகை ஆகியவை தகுதியான பலருக்கு வழங்கப்படவில்லை. இந்த சூழலில், பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கப்படாதது மக்களின் மனக்குறையை கோபமாக மாற்றி விடும். எனவே, குறைந்தபட்சம் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும். அத்துடன், செங்கரும்புக்கான தொகையை ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: வெள்ள நிவாரணத்துக்கான டோக்கனில் தொடங்கி பணம் வழங்குவது வரை ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் குறித்தஅறிவிப்பு இல்லாதது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க வேண்டும்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ: பொங்கல் ரொக்கத் தொகையை எவ்வித அறிவிப்பும்இன்றி தமிழக அரசு நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் பொங்கலுக்கு வழங்கும் ரூ.1,000 ரொக்கத்தையும் நிறுத்தியதை நியாயப்படுத்த முடியாது. எனவே, அனைத்து குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,000 வழங்க வேண்டும். பரிசுத் தொகுப்புடன், வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE