ஒரு மாதமாக சர்வர் பிரச்சினை: பணப்பலன்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: சர்வர் பிரச்சினை காரணமாக தொழிலாளர் நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பணப்பலன்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழக தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் அதனை சார்ந்த 16 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் உள்ளன. இந்த நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதல் மேல்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மகப்பேறு நிதி, திருமண நிதி, 60 வயதை நிறைவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விபத்து மற்றும் இயற்கை மரண நிதி உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதற்கு நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதங்களது நலவாரிய அட்டையை புதுப்பிக்கவேண்டும். கடந்த ஆட்சியின் இறுதியில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பணப்பலன்கள் பெறுவது மற்றும் பதிவுகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சர்வர் கோளாறால் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் நலவாரியத்தில் புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து சிஐடியு. மாநிலக் குழு உறுப்பினரும், தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளருமான ர.கிருஷ்ணவேணி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளனர்.

முன்பு தொழிலாளர் அலுவலகத்துக்கு சென்று புதிதாக நலவாரியத்தில் இணைவது, புதுப்பிப்பது, திருமண உதவி நிதி, ஓய்வூதியம் பெறுவது உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்பட்டு புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாததால் பணப்பலன் பெறுவதில் சிக்கல் உருவாகி வருகிறது.

கடந்த 2-ம் தேதி முதல் சர்வர் பிரச்சினை இருப்பதால் 4-ம் தேதி நலவாரிய அட்டை புதுப்பித்தல் உள்ள தொழிலாளி, 10-ம் தேதி 60 வயதை நிறைவடைந்திருந்தால் அவருக்கு ஓய்வூதியத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் ஓய்வூதியம் கிடைக்காது.

இதுபோல் மகப்பேறு, திருமணம் மற்றும் இறப்பு போன்றவற்றுக்கும் பணப்பலன்கள் பெறமுடியாது. ஒரு மாதமாகியும் சர்வர் பிரச்சினை சரி செய்யப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சர்வர் பிரச்சினை ஏற்படும் காலங்களில் நேரடியாக விண்ணப்பங்களை பெற உத்தரவிட வேண்டும். கடந்த 2-ம் தேதி முதல் சர்வர் பிரச்சினை சரி செய்யப்படும் காலம் வரை புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்களுக்கு கால அவகாசம் வழங்கி, பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

தமிழகம்

23 hours ago

தமிழகம்

1 day ago

மேலும்