புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை: ஆளுநர் தமிழிசை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. அதில் கட்டுப்பாடு தேவை. அரசிடமும், டிஜிபியிடம் இதுபற்றி கேட்கவுள்ளேன்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி ராஜ் நிவாஸில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை பொதுமக்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொண்டு இன்று நண்பகலில் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியது: ''புத்தாண்டில் புதுச்சேரி வளர்ச்சி அபரிதமாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிக உதவிகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து மத்திய அரசு ஆதரவை தரும். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சியாக வாழ அரசும், எனது பங்கும் இருக்கும்.

மத்திய அரசு நிதி சரியாக தருவதில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது தொடர்பாக கேட்கிறீர்கள். புது வருடத்தில் எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்தேன். மோதல் போக்கிலேயே கேட்பது சரியாக இருக்காது. மாநில அரசுக்கு மத்திய அரசானது உதவிகரமாக இருக்கும். அதற்கான வழிமுறை இருக்கிறது. யாரையும் வஞ்சிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருக்காது. மத்திய குழு உடன் வந்து பார்வையிட்டது. மாநில அரசுக்கு ஒரு பங்கு, கடமை இருக்கிறது. இதில் மத்திய அரசுதான் செய்யவில்லை என்று சொல்வது சரியில்லை.

மத்திய அரசு எவ்வகையிலும் புறக்கணிக்காது. வட மாநிலங்களுக்கு மட்டும் செய்வதாக கூறுகிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் திருச்சியில் சொல்லியுள்ளார். எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்ததாக நாட்டை மத்திய அரசு முன்னேற்றுகிறது.

ரேஷன் கடைகளில் வரிசையாக நிற்க வைத்து தருவதை விட புதுச்சேரியில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதுதான் அன்புடன் நடத்துவதாகும். கர்நாடகா, தெலங்கானாவில் வங்கி கணக்கில்தான் பணம் செலுத்துகின்றனர். நிறைவாக குறை சொல்லாமல் புத்தாண்டில் இருப்போம்.

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நால்வர் கடலில் உயிரிழப்பு, கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக டிஜிபியிடம் கேட்பேன். ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. அது வேறுமாதிரி சென்று கொண்டிருக்கிறது. அதில் கட்டுப்பாடு தேவை. கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் வரைமுறை தேவை. அரசிடமும், டிஜிபியிடம் கேட்கிறேன். கொண்டாட்டம் என்பது அளவுமீறலாகவும், திண்டாட்டமாகவும் மாறிவிடக் கூடாது.

கடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பதும் டிஜிபியிடம் தெரிவிப்பேன். தெலங்கானா முந்தைய முதல்வர் அரசியலமைப்பை மதிக்கவில்லை. புது அரசு வந்துள்ளது. முதல்வர் வந்து பார்த்து வாழ்த்து தெரிவித்தார். ஆளுநருக்கும், முதல்வருக்கும் புரிந்துணர்வு நட்புணர்வு இருந்தால் மக்களுக்கு பலன் தரும். கருத்து வேறுபாடு மோதலாக இருக்கக் கூடாது'' என்று தமிழிசை குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE