வரி உயர்ந்தது... வாழ்க்கைத் தரம் உயரவில்லை..! - திருமுருகன்பூண்டி நகராட்சி மக்கள் வேதனை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட நகராட்சி திருமுருகன்பூண்டி. மாநகரை ஒட்டியிருக்கும் முதல்நிலை நகராட்சி. 2021-ம் ஆண்டு பேரூராட்சி, நகராட்சியாக மாறியது. அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கும், நீலகிரிமக்களவைத் தொகுதிக்கும் உட்பட்ட பகுதியாகதிருமுருகன் பூண்டி நகராட்சி உள்ளது. சுமார் 18 ஆயிரம் வாக்குகள் இங்குள்ளன. ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 27 வார்டுகளை கொண்ட நகராட்சியாகும். இந்த நகராட்சியில் வாழும் மக்கள், தங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், போதிய தரத்தில் இல்லை என்கின்றனர்.

இது தொடர்பாக திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் நகராட்சிக்கு 3-ம் குடிநீர் திட்ட நீரான, பவானி ஆற்று நீர் அதிக அளவில் வருகிறது. ஆனால் 2-ம் குடிநீர் திட்ட நீரான மேட்டுப்பாளையம் குடிநீர் குறைவாகவே கிடைக்கிறது. மேட்டுப்பாளையம் குடிநீர் சுவையாக உள்ளது. பவானி ஆற்று நீர் சுவையாகவோ, குடிக்கும் தரத்துடனோ இல்லை.

இதனால் பல வார்டுகளிலும் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது 14 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. தண்ணீரில் அதிக அளவில் புழுக்கள் தோன்றுவதால், மக்கள் குடிக்க முடியாத சூழல் உள்ளது. பேரூராட்சியாக இருந்தபோது வரி குறைவாக இருந்தது. தற்போது குடிக்க முடியாத குடிநீருக்கு வரிகட்டுகிறோம். நகராட்சியாக மாறியபின்னரும், எங்கள் வாழ்க்கைத்தரம் மாறவில்லை என்பது வேதனையே. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில்
குழாயிலிருந்து வீணாக வெளியேறும்
பவானி குடிநீர்.

திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்லீலாவதி கூறும்போது, “நகராட்சிக்கான உட்கட்டமைப்பு எதுவும் எங்களுக்குஇல்லை என்பது உண்மைதான்.அதிலும் முதல் நிலை நகராட்சி என்பதுகூடுதல் சிறப்பு. கடந்த 11 ஆண்டுகளாக குடிநீர் இணைப்புகள் வழங்காமல், தற்போதுதான் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

சுமார் 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குடிநீர் சுவையாகவும்,உரிய தரத்திலும் இல்லை என்பதால் பொதுமக்கள் பலரும் தங்கள்அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது 6 மாதங்களுக்கு ஒருமுறை வரி வசூலிக்கப்படுகிறது. தூய்மை பணியை தனியார்நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கும் நிலையில், அவர்கள் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதால், சுகாதாரப் பணிகளும் முடங்கி உள்ளன. பெரிய தொழில் நிறுவனங்கள், விவசாயம், குடியிருப்புகள் என நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கும் பகுதியில், போதிய நிர்வாக வளர்ச்சி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நகராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி கூறும்போது, ‘‘மக்களுக்கான குடிநீர், சப்பைத்தண்ணீராகஇருப்பதால், பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேசமயம் புதிய குடிநீர் இணைப்புகளுக்குபலரும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் 3-ம் குடிநீர் திட்டமான பவானி நீரை அதிகப்படுத்தி தருவதாக சொல்கிறார்கள். அந்த நீரை மக்கள் விரும்பவில்லை. மேட்டுப்பாளையம் குடிநீரை அதிகப்படுத்தி தருவதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும்’’ என்றார்.

திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகள் கூறும் போது, “நகராட்சிக்கு 4.92 எம்.எல்.டி குடிநீர் தேவை. ஆனால் 2.5 எம்.எல்.டி தான் கிடைக்கிறது.2.42 எம்.எல்.டி குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தண்ணீர் விநியோகத்தை மெதுவாக முறைப்படுத்தி வருகிறோம். 2-ம் குடிநீர் திட்டமான மேட்டுப்பாளையம் நீரை அதிகமாக வழங்குமாறு மக்கள் கேட்கிறார்கள். இது தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE