“பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான நடவடிக்கையின் பின்னணியில் பொன்முடி” - அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: "சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முகாந்திரமே இல்லாத ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பெரியார் பல்கலை. துணை வேந்தர் PUTER ஒரு பவுண்டேஷனை துவங்குகிறார். ஆனால், இதை ஒரு கம்பெனி துவங்கியதைப் போல மக்களுக்குச் சொல்லிவிட்டனர். உண்மையில் அந்த பவுண்டேஷன் பெயரே, Periyar University Technology Entreprenurship Research Foundation என்பதுதான். பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும் ஒரு கம்பெனி, அந்த கம்பெனியின் லாபத்தை யாரும் வெளியே எடுத்துபோக முடியாது. அந்த கம்பெனியின் வளர்ச்சிக்காக மட்டும்தான் அதை பயன்படுத்த வேண்டும்.

இந்த கம்பெனியில் இயக்குநராக பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், கம்யூட்டர் சயின்ஸ் துறையின் தலைவர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருக்கும் தங்கவேலு, பேராசிரியர் சதீஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ராம்கணேஷ் ஆகியோர் உள்ளனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் இயக்குநர்களாக இருக்கும் 4 பேரும் பேராசிரியர்கள்.

இந்த நிறுவனத்தின் நோக்கம் என்னவென்றால், தனியாரிடம் இருந்து வரக்கூடிய பணத்தை எடுத்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவது. குறிப்பாக, மாணவர்களுக்குத் தேவையான இண்டஸ்ட்ரீ 4.0 டெக்னாலஜி, மாணவர்களின் ஆற்றல் திறனை அதிகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்த கம்பெனியை ஆரம்பித்துள்ளனர். இந்த நிறுவனத்துக்கு, பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முதல் தளத்தில் 2000 ச.அடி இடத்தைக் கொடுத்து அங்கு நடந்து வருகிறது. இதில் என்ன தவறு உள்ளது?

இந்தியா முழுவதுமே உள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனிகளுக்கு வேறு வேறு இடங்களில் இருந்து பணம் வருகிறது. அந்த பணத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை. நியாயமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். லாப நோக்கமில்லாத நிறுவனம். இதை காவல் துறையினர், பெரியார் பல்கலைக்கழகத்தின் சொத்துகளை கொள்ளையடிப்பது போன்ற அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது. இதற்காக காவல் துறை தங்களது முகத்தை தொங்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தளவுக்கு மோசமாக இந்த பல்கலைக்கழக விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளனர். துணைவேந்தரிடம் பேச சென்றபோது தன்னை சாதிப் பெயர் சொல்லி திட்டிவிட்டார். எனவே, அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கூறி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், புகார் கொடுத்தவர்கள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. துணைவேந்தரை சந்திக்கும் வீடியோவில் இருப்பதில் ஒருவர் சக்திவேல். இவர் பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர். இவர் துணைவேந்தரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். ஆனால், அவர் உடன் வந்த இளங்கோ என்பவர்தான், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளார்.

இது முகாந்திரமே இல்லாத ஒரு வழக்கு. ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒருவர், மேலும் ஒரு நபருடன் வந்து துணைவேந்தரின் கார் கதவை பிடித்து இழுத்து பிரச்சினை செய்துள்ளனர். இதெல்லாம் எதற்காக நடக்கிறது என்றால், அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 5 ஆண்டுகள் பதிவாளர் இல்லாமல் இயங்குகிறது. பொன்முடி ஒருவரை பதிவாளராக பணியமர்த்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். அதை துணைவேந்தர் ஜெகநாதன் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்போது ஆளுநர், துணைவேந்தரிடம் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றி பதிவாளரை பணியமர்த்த உத்தரவிடுகிறார். இதற்கான கூட்டம் கடந்த 6.11.2023 அன்று நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு உயர் கல்வித் துறை செயலர் கார்த்திக் வரவில்லை. அவருக்குப் பதிலாக துணை செயலர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அப்போது பதிவாளர் பணியிடம் குறித்து பேசும்போது காணொளி வாயிலாக உயர்கல்வித் துறை செயலர் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்கு துணைவேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்" என்று அண்ணாமலை கூறினார்.

வழக்கும் பின்னணியும்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்தி நிதியை முறைகேடு செய்ததாகவும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் சிலரை சாதிப் பெயர் கூறி திட்டியதாகவும் கருப்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் கருப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவரை ரிமாண்ட் செய்ய மறுத்து, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.தனபால் முன்பு இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் வாதிட்டதாவது: இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. கைது செய்யப்பட்ட துணைவேந்தரை ரிமாண்ட் செய்ய மறுத்து அவருக்கு குற்றவியல் நடுவர் இடைக்கால ஜாமீன் அளித்தது சட்டப்படி தவறு.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் துணைவேந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்றத்துக்கான அதிகாரத்தை குற்றவியல் நடுவர் கையில் எடுத்து செயல்பட முடியாது. இவ்வாறு வாதிட்டார்.

துணைவேந்தர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிட்டதாவது: போலீஸார் விசாரணையின்போது சேகரித்துள்ள ஆவணங்களை பார்வையிடக்கூட எங்களை அனுமதிக்கவில்லை. புகாரில் எந்த ஆவணமும் இணைக்கப்படவில்லை. இந்த புகாரே பொய்யானது. துணைவேந்தருக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவியல் நடுவர் தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தியே, இடைக்கால ஜாமீன் அளித்துள்ளார். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவே விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி தனபால் பிறப்பித்துள்ள உத்தரவில், “தீவிரமான தனி நபர் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கில், துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. எனவே, இந்த மனுவுக்கு துணைவேந்தர் தரப்பிலும், அதேபோல இடைக்கால ஜாமீன் வழங்கியது தொடர்பாக சேலம் குற்றவியல் நடுவரும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE