துணிச்சலான புதிய உலகை இளைஞர்கள் உருவாக்குகின்றனர்: பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

திருச்சி: இந்திய இளைஞர்கள் துணிச்சலான புதிய உலகை உருவாக்கி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் 38-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழா அரங்கில் ஆய்வுப் பட்டம் (பிஹெச்.டி.) மற்றும் தங்கப் பதக்கம் பெற்ற 256 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தங்கப் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் 75 பேருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். துணைவேந்தர் எம்.செல்வம் பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். பிரதமர் நரேந்திர மோடி10 மாணவ, மாணவிகளுக்கு ஆய்வுப் பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கிப் பேசியதாவது:

பாரதிதாசன் பல்கலை. 38-வதுபட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது பெருமையளிக்கிறது. இந்த பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு வரும் முதல் பிரதமர்நான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1982-ல் உருவாக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனிதநேயம், மொழிகள், அறிவியல், செயற்கைக்கோள்கள் என அனைத்திலும் தனித்துவமான அடையாளம் பெற்றிருக்கிறது. நமது தேசமும், நாகரிகமும் அறிவை மையமாகக் கொண்டுள்ளன. பழங்கால நாளந்தா பல்கலைக்கழகம் போன்று காஞ்சிபுரத்திலும் பெரிய பல்கலைக்கழகம் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.

கங்கைகொண்ட சோழபுரம், மதுரை உள்ளிட்ட நகரங்கள், சிறந்தகற்றல் இடங்களாக இருந்தன. இந்தஇடங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வந்துள்ளனர்.

இளம் மாணவர்களான நீங்கள்,சிறந்த வரலாற்று அறிவு பாரம்பரியத்தின் பகுதியாக இருக்கிறீர்கள். மனிதர்களுக்கும், தேசத்துக்கும் நல்வழிப் பாதையைக் காட்டுவதில் பல்கலைக்கழகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நமது பல்கலைக்கழகங்கள் துடிப்புடன் இருந்தபோது, நமது தேசமும் நாகரிகமும், துடிப்பும் மிக்கதாக இருந்தது. நமது தேசம் தாக்கப்பட்டபோது, அறிவுசார் அமைப்புகள் குறிவைக்கப்பட்டன.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மகாத்மா காந்தி, பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் சர் அண்ணாமலை செட்டியார் போன்றவர்களால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், சுதந்திரப் போராட்டத்தின்போது அறிவு மற்றும் தேசியவாதத்தின் மையங்களாகத் திகழ்ந்தன. அதேபோல, இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு பல்கலைக்கழகங்கள் முக்கியக் காரணிகளாக இருந்து வருகின்றன.

பட்டம் பெற்றுள்ள மாணவர்கள், கல்வியின் நோக்கத்தையும், சமூகம் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உயர்ந்த கல்வி, நமக்கு வெறும் தகவலை மட்டும் தருவதில்லை, அனைத்து தரப்பினருடனும் இணக்கமாக வாழ உதவுகிறது என்று ரவீந்திரநாத் தாகூர் கூறினார்.

நீங்கள் பட்டம் பெற்றதில், நாட்டில் உள்ள ஏழைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயமும் பங்கு வகித்துள்ளது. அவர்களுக்கு சிறந்தசமுதாயத்தை உருவாக்கித் தருவதுதான் நீங்கள் பெற்ற கல்வியின் உண்மையான நோக்கம்.

நீங்கள் கற்றுக்கொண்ட அறிவியல் உங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிக்கும், தொழில்நுட்பம் சிக்கலானப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், வணிக மேலாண்மை நல்ல வணிகங்களை நடத்தவும், மற்றவர்களின் வருமான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் உதவ வேண்டும். அதேபோல, நீங்கள் கற்ற பொருளாதாரம் வறுமையைக் குறைக்கவும், மொழிகள் வரலாறு கலாச்சாரத்தை வலுப்படுத்தவும் உதவ வேண்டும்.

இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரியும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்க வேண்டும். இளைஞர்களின் திறனில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்பதுதான் உங்கள் பல்கலை.யின் முழக்கம். துணிச்சலான புதிய உலகத்தை உருவாக்குவோம் என்பதுதான் இதன் பொருள். இந்திய இளைஞர்கள் ஏற்கெனவே அத்தகைய உலகத்தை உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பின்னர், ஆய்வுப் பட்டம் பெறுவதற்காக 1,270 மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்த பல்நோக்கு அரங்குக்குச் சென்ற பிரதமர் மோடி, அனைவருக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்