விமான நிலையத்தில் வரிசையில் நின்று பிரதமர் மோடியை சந்தித்த ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி விமானநிலைய புதிய முனையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த பிரதமரை சந்திக்க, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார்.

பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்துநேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானத்தில் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி வந்தார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வந்திருந்தார்.

இதையடுத்து, டெல்லியில் இருந்து நேற்று காலை 10.05 மணிக்கு திருச்சி வந்த பிரதமரை வரவேற்க, விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் காத்திருந்தார். அங்கு தன்னை வரவேற்ற ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டும் 5 நிமிடங்கள் பிரதமர் மோடி பேசினார்.

இதேபோல, திருச்சி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு லட்சத்தீவுகளுக்குப் புறப்பட்டுச் செல்லும் முன்பும், விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துடன் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் சிறிது நேரம் பிரதமர் பேசியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறும்போது, "அமமுகவுடன் கூட்டணி அமைக்க பிரதமர் சம்மதம் தெரிவித்தால், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை பாஜக கூட்டணியில் ஒருங்கிணைக்கும் பணிகளை ஓ.பன்னீர்செல்வம் முன்னெடுப்பார்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE