திருச்சி: "கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நிவாரண நிதியை வழங்க, தமிழக மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டட திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தைத் தொட்ட மாநிலமான தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கிற திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்திருக்கிறார். தமிழக முதல்வர் என்ற வகையில், தமிழக மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், இந்த துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம். இதை மேலும் தமிழக அரசு ரூ.318 கோடியே 85 லட்சம் செலவில், 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து இந்திய விமான ஆணையத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் திருச்சி உட்பட சென்னை, கோவை, மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை, விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்க ரூ.3,118 கோடி செலவில், 2,302.44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
தென் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் ஆன்மிக பயணமாக வருகின்றனர். பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். அவர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கெனவே வைத்த கோரிக்கையை பிரதமர் கனிவோடு பரிசீலிக்க வேண்டுகிறேன்.
மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தக தொடர்புகள் கொண்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு சென்னை-பிணாங்கு மற்றும் சென்னா-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்கு பகிர்வு மாதிரி அடிப்படையில் மத்திய அரசினுடைய பங்கை விரைந்து வழங்க பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சமீபகாலமாக இருவழிச் சாலையாக மேம்படுத்துகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தின் MSME நிறுவனங்கள்தான் BHEL பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை வழங்கி வந்தனர்.
தற்போது BHEL நிறுவனத்திடமிருந்து MSME நிறுவனங்களுக்கு வரும் கேட்பாணை மிகவும் குறைந்துவிட்டது. இதனால், இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்ற MSME நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, BHEL நிறுவனம் அதிகப்படியான கேட்பாணைகளை MSME நிறுவனங்களுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர் அறிந்த ஒன்றுதான், கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க, தமிழக மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோமே என்று எண்ண வேண்டாம். பரந்து விரிந்த இந்திய பெரு நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து கல்வி, மருத்துவம், அவசிய தேவைகள் மற்றும் உதவிகளை செய்துதர வேண்டிய முக்கிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது.
மாநிலத்துக்காக கோரிக்கை வைப்பதும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும், அங்கு வாழும் மக்களின் கோரிக்கைகள்தானே தவிர, அவை, ‘அரசியல் முழக்கங்கள்‘ அல்ல. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை பிரதமர் நிச்சயமாக நிறைவேற்றி தருவார் என நான் நம்புகிறேன்" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago