“பாகுபாடு காட்டாமல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்” - ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு சென்னை மெட்ரோ திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் ஒப்பிடும்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுகாக மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை யானைப்பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.3273 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது திட்டமதிப்பில் வெறும் 5% மட்டுமே. குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்கும் மத்திய அரசு தமிழகத்தை மட்டும் வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் ரூ.61,843 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2018-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கான மத்திய அரசின் பங்காக ரூ.3273 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.28,877 கோடியும், பெங்களூரு மெட்ரோவுக்கு ரூ.19,236 கோடியும், குஜராத் மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.15,218 கோடியும், உத்தரப்பிரதேச மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.12,919 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் ஒப்பிடும்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுகாக மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை யானைப்பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும்.

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளிடம் வாங்கப்பட்ட கடன் போக, மீதமுள்ள முதலீட்டுத் தொகையை மத்திய மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டன. அதேபோல், இரண்டாம் கட்டத்திலும் திட்ட மதிப்பில் 70 விழுக்காட்டை பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளிடம் கடனாகப் பெறலாம். மீதமுள்ள 30 விழுக்காட்டை மத்திய, மாநில அரசுகள் தலா 15% என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் சென்னை மாநகருக்கான இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.9276 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

சென்னை மாநகரின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருக்கிறது. திட்டப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் மூன்றாண்டுகள் ஆகிவிட்ட போதிலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு மொத்தம் 7 முறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

திட்ட மதிப்பில் 15 விழுக்காட்டை பங்கு முதலீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், 10% தொகையை மட்டுமே மானியமாக வழங்குவதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்த சிக்கலில் கருத்தொற்றுமை ஏற்படாததும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிப்பது தாமதமாவதற்கு ஓர் காரணமாகும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும், நிதி ஒதுக்கவும் மத்திய அரசு மறுப்பது சரியல்ல. தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு காட்டும் பாகுபாடாகவே இதை பார்க்க வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முக்கியத்துவம் கருதி 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.10,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் முறையே ரூ.3100 கோடி, ரூ.2681 கோடி என மொத்தம் ரூ.15,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், 2024 மற்றும் 25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றால் பணிகள் முடங்கும் ஆபத்து உள்ளதை மத்திய அரசு உணர வேண்டும்.

சென்னை மாநகரின் வளர்ச்சியிலும், பொதுப்போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் மெட்ரோ ரயில் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தகைய திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதிலும், நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மத்திய அரசு தாமதம் காட்டக்கூடாது. டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதுடன், 15% பங்கு முதலீடு வழங்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்