திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் ஆங்காங்கே மேடை அமைத்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. சாலையில் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமரின் கார் கடந்தபோது மலர்தூவி வரவேற்பு நல்கினர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வந்த பிதமர் மோடி அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பிரதமர் உள்ளே வந்ததும், பதக்கம் பெறும் மாணவர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் பிரதமர், ஆளுநர், முதல்வர் அமர்ந்தனர். குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் அவர்களைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டம் பெற்ற மாணவர்களை நோக்கி “டெல்லிக்கு வர விருப்பமா?” என்று அவர் வினவினார். மாணவர்கள் உற்சாகமான குரலில் ஆமோதித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE