சர்வதேச தரத்தில் இயங்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: கூடுதல் இருக்கைகள், அம்மா உணவகம், அரசு மருத்துவமனை கோரும் பயணிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கரில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், ரூ.393 கோடியே 74 லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்: பேருந்து முனையத்தின் முகப்பு விமான நிலையம் போல் காட்சியளிக்கிறது. நாள்தோறும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாக இடவசதி உள்ளது. பிரதான கட்டிடத்தின் அடித்தளங்களில், 1000 கார்கள் மற்றும், 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுஉள்ளன. தாய்மார்கள் பாலூட்டும் அறை, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிலையத்துக்குள்ளேயே அவசர சிகிச்சை மையமும், மருந்தகமும், 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. இதேபோன்று, பயணிகளுக்கான குடிநீர் வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, உணவகம், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், மாநகர பேருந்துகள் வந்து செல்வதற்கென தனி நடைமேடைகளும் உள்ளன.

மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்து நிலையத்துக்கு செல்ல எஸ்கலேட்டர் வசதி யும், அதிக பாரத்தை கொண்டு செல்ல லிஃப்ட் உள்ளிட்ட அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் மொத்தம், 6 லிஃப்ட்களும், 1 எஸ்கலேட்டரும் பயன்பாட்டில் உள்ளன.

இதேபோன்று பயணிகள் ஓய்வறை, ஓட்டுநர் - நடத்துநர் ஓய்வறை, பேருந்து பணிமனைகளும் இடம்பெற்றுள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்து நிலையம் முழுவதும், 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலைய வளாகத்தில் புறநகர் காவல் நிலையமும், விநாயகர் கோயிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் வந்து, ஊரப்பாக்கம் - அய்யன்சேரி கூட்டு சாலை வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைய ஏதுவாக சாலை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் வசதிகள் தேவை: இருக்கைகள் - இங்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தும் பகுதியில் குறைவான இருக்கைகளே உள்ளன. மாநகர பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில் ஒரு இருக்கை வசதி கூட இல்லை. எனவே, அந்த பகுதியில் இருக்கை வசதிகளை ஏற்படுத்தவும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் கூடுதல் இருக்கை வசதிகளை ஏற்படுத்தவும் வேண்டும்.

புறநகர், வெளியூர் பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு செல்லவும், அங்கிருந்து மாநகர பேருந்து நிறுத்தும் இடத்துக்கு வருவதற்கும் நேரடி வசதி இல்லாமல் உள்ளது. மைய கட்டிடத்துக்கு சென்று பின்னர் சுரங்கப்பாதை வழியாக மாநகரப் பேருந்து நிறுத்தத்துக்கும், அங்கிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிக்கும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு சற்று சிரமமமாக உள்ளது என்றும், நேரடியாக செல்லும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இலவச மருத்துவ சேவை: இங்கு இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அம்மா உணவகம்: ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு பெற அம்மா உணவகம் இல்லை; பயணத்துக்கு காத்திருக்கும் தொலைதூர பயணிகளுக்கு நூலக வசதி இல்லை. எனவே இது போன்ற வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பயணி ரபிக் கூறியது: சர்வதேச தரத்துடன், நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த புதிய பேருந்து நிலையத்தின் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தாலும், அரசு தனி அலுவலகங்களை நியமித்து பணிகளை கண்காணிக்க வேண்டும். 2 நாட்களிலேயே கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை; குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. மக்கள் எளிதாக செல்வதற்கு அறிவிப்பு பலகை இல்லை. மாநகரப் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி இல்லை. அரசு மருத்துவமனை இல்லை. இவற்றை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வண்டலூரை சார்ந்த கண்ணன் கூறியதாவது: பேருந்து நிலையம் வசதியாக இருந்தாலும், ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே பெருங்களத்தூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வரை வாகன நெரிசல் அதிகமாகவே காணப்படும். சாலை எங்கும் இரு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் ௮திக ௮ளவில் உள்ளன. அவற்றை நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து தமிழக அரசு அகற்ற வேண்டும். ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் நெரிசல் ஏற்படுகிறது.

வெளியே செல்லும் பயணிகளுக்கு வசதியாக நூலக வசதியை ஏற்படுத்த வேண்டும். உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலை அதிகமாக உள்ளது. உணவு விலையை கட்டுப்படுத்ததும் வகையில் அம்மா உணவகம் அல்லது, திமுக அரசு அறிவித்த கலைஞர் உணவகத்தை இங்கு ஏற்படுத்த வேண்டும். வசதி படைத்தவர்கள் மட்டுமே வியாபாரம் செய்யும் வகையில் பேருந்து நிலையத்தின் கடைகளின் வாடகை உள்ளது. ஏழை எளிய, சிறிய வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கான வசதியை அரசு ஏற்படுத்தவில்லை என்றார்.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலர் டி.மாறன் கூறியதாவது: தற்போதிருந்தே கோயம்பேடு, கிளாம்பாக்கம் என அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றுகிறோம். நகரின் உட்பகுதியிலேயே பெரும்பாலான நிறுவனங்களின் பணிமனை இருக்கிறது.

எனவே, பகுதி வாரியாக பேருந்துகளை மாற்றி இயக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். பொங்கலுக்கு பிறகு உடனடியாக மாற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. மக்களின் எண்ணத்தை அறிந்த பிறகே பேருந்து இயக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் கூறும்போது, ‘‘கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி, பராமரிக்க போதிய இடவசதி இல்லை. தற்போதுதான் சிஎம்டிஏ சார்பில் 5 ஏக்கர் பரப்பளவில் பணிமனைக்கான இடம் தயார் செய்யப்படுகிறது.

ஆனால், கோயம்பேட்டில் பராமரிப்புக்கு இடம் இருக்கிறது. பூந்தமல்லியில் ஏராளமான பேருந்துகளின் பணிமனை இருக்கிறது. எனவே, பராமரிப்புக்காக கோயம்பேடு வந்து செல்ல வேண்டும் அல்லது கிளாம்பாக்கத்தில் பராமரிப்புக்கான இடம் தயாரான பிறகு அங்கிருந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என அரசிடம் கேட்டிருக்கிறோம்.

ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்’’ என்றார்.

ஒலிபெருக்கி அறிவிப்பு தேவை: பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களில் குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கு டம்ளர் வைக்கப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லை, மாறாக தனியார் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் கட்டண சேவையாக உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பகுதியில் ஜி.எஸ்.டி. சாலை ஒட்டிய பகுதிகளில் தினமும் 3 ஷிஃப்டாக போக்குவரத்து போலீஸார் 75 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இளைப்பாற வசதி இல்லை. பேருந்து நிலையத்தின் உள் பகுதியில் சட்டம் -ஒழுங்கு போலீஸாருக்கு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் போக்குவரத்து போலீஸாருக்கும் நிலையம் அமைக்க வேண்டும் என போக்குவரத்து போலீஸார் வலியுறுத்தியுள்ளனர். எந்த பேருந்துகள் எந்த பகுதியில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதி அமைக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரியுள்ளனர்.

- பெ. ஜேம்ஸ் குமார் / செ.ஆனந்த விநாயகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்