ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதிய இயக்குநரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஐந்தாண்டுகள் நிறைவு செய்த ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பதவிக் காலம் இன்று முதல் மேலும் ஓராண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் இயக்குநராக கடந்த 2019 ஜனவரி 1 ஆம் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார். ஜிப்மர் இயக்குநராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட பிறகு இந்தி கட்டாயமாக்கப்பட்ட பிரச்சினை எழுந்தது. இலவச மருந்து மாத்திரை விநியோகம் இல்லாதது, மாத்திரை தட்டுப்பாடு, உயர் சிகிச்சைக்கு ஏழைகளைத் தவிர்த்து கட்டணம் என பல சர்ச்சைகள் எழுந்தன. ஜிப்மருக்கு எதிராக கட்சிகளின் போராட்டமும் நடந்தது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும் சரியாக செயல்படுத்தவில்லை என்ற புகாரும் எழுந்தது.

ஜிப்மர் இயக்குநருக்கு எதிராக புகார்கள் அதிகரித்ததால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குநர் தரப்பினர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பல உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இச்சூழலில் ஜிப்மர் இணையதளத்தில் ஜிப்மர் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. நிர்வாக துணை இயக்குநருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்களுக்கு ஆகியும் புதியவர் நியமிக்கப்படவில்லை. இதனால், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிர்வாக துணை இயக்குநர் கிருஷ்ணகோபால் கோயல் பிறப்பித்துள்ளார். அடுத்த இயக்குநர் நியமிக்கும் வரையிலோ, அடுத்த உத்தரவு வரும் வரையிலோ அவர் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இயக்குநரை தேர்வு செய்து நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் தான் இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு காரணம் என ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகேஷ் அகர்வால் கடந்த 1961-ல் பிறந்தார். அவர் 65 வயது வரையிலோ, நியமனத்திலிருந்து ஐந்து ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று நேற்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆனதால் இன்று முதல் ஓராண்டு பதவிக் காலம் நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE