பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

திருச்சி: விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.2) திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

பிறகு, கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர், அங்கு 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் நடக்கும் விழாவில், ரூ.1,112 கோடி மதிப்பிலான விமானநிலைய புதிய முனையம், திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி, சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி - மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இவைதவிர, 5 சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார். இவ்வாறு, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். அதன்பிறகு மதியம் 1 மணியளவில் தனி விமானத்தில், லட்சத்தீவுகள் செல்கிறார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கிறார்.

3 அடுக்கு பாதுகாப்பு: பிரதமர் வருகையையொட்டி, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (எஸ்பிஜி) கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

தீவிர சோதனை: திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான 11 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரதமர் வருகையின்போது, இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் இன்று (ஜன.1) இரவு 8 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுவழியில் வாகனங்களை திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாக்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் வழித்தடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்து வருகின்றனர்.

அரசு, பாஜக வரவேற்பு: பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல, பாஜக சார்பில் 7 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரை வரவேற்று, பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 5 இடங்களில் அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்