டிஆர்பி வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு எப்போது? - பணிகளில் மெத்தனம் காட்டுவதாக பட்டதாரிகள் அதிருப்தி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மேலும், கடந்தாண்டு வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற 9 அறிவிப்புகளில் ஒன்றுக்கு மட்டுமே டிஆர்பி தேர்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி ஆசிரியர் தகுதித்தேர்வும் (டெட்) டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது.

ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும், தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி-யைப் போல் டிஆர்பி-யும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் முடிந்து 2024-ம் ஆண்டு பிறந்தும் இன்னும் டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால், அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோரும், டெட் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருப்போரும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டிஆர்பி தேர்வு அட்டவணையில் மொத்தம் 9 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் வெறும் 2 அறிவிப்புகள் (பிஇஓ தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தேர்வு) மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் பிஇஓ தேர்வு மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு தேர்வு அட்டவணையில் இடம்பெற்றிருந்த அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு, அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, டெட் தேர்வு ஆகிய 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, டெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெட் தேர்வு நடத்தப்பட்டது. 2023 தேர்வு அட்டவணையின்படி புதிய டெட் தேர்வுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிற மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் டெட் தேர்வுக்கு இன்னும் அறிவிப்பே வெளியிடவில்லை. மறுபுறம் சிடெட் எனப்படும் மத்திய டெட் தேர்வு திட்டமிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி என அனைத்து தேர்வு வாரியங்களும் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டுவிட்ட நிலையில், டிஆர்பி எப்போது தேர்வு அட்டவணையை வெளியிடும் என்று அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோரும், டெட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்போரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள 7 அறிவிப்புகளுடன் புதிய அறிவிப்புகளையும் சேர்த்து 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஆர்பி விரைந்து வெளியிட வேண்டும் என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்