சென்னை: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழில் கடன் வழங்குவதற்காக ரூ.1,000 கோடியில் நிவாரண தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கான நிவாரணத் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின், கடந்த 21-ம்தேதி பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதற்கானஅரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணஉதவிகள், கூடுதலாக அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்றுஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு, அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
வீட்டு வசதிக்கு ரூ.385 கோடி: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்கவும், முழுமையாக கட்டித் தரவும் அரசு முடிவெடுத்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
» பாஜக எம்.பி-யின் சகோதரர் கைது @ கர்நாடகா
» IND-W vs AUS-W 2-வது ஒருநாள் போட்டி | 3 ரன்களில் ஆஸி. வெற்றி!
இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியமாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.385 கோடியில் 4 ஆயிரத்து577 புதிய வீடுகள் கட்டப்படும். 9 ஆயிரத்து 975 வீடுகளுக்கு பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநிலஅரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
பயிர் சேத நிவாரணம்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் ரூ.250 கோடி வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும், வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கான கடனும் வழங்கப்படும்.
சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள், தங்கள்வணிகத்தை மீண்டும் புதுப்பிக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்’ என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும்.
இதன் கீழ், பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி கடனாகவழங்கப்படும். தொழில்நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம்,ஆண்டுக்கு 6 சதவீத சிறப்பு வட்டியில் கடன் வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத காலஅவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3,300 எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் பயனடையும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த 4 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு ரூ.350 கோடியில் புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17 ஆயிரம் கால்நடைகளும் ஒரு லட்சத்துக்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்குநிவாரணமாக பசு, எருமைக்கு தலா ரூ.37 ஆயிரத்து 500 வரையிலும், ஆடு, செம்மறி ஆட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரையிலும், கோழிக்கு ரூ.100 வரையிலும் வழங்கப்படும்.
கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்க வசதியாக ரூ.1.50 லட்சம் வரை புதிதாக கடன் வழங்கப்படும்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 4,928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாகரூ.15 கோடி வழங்கப்படும். உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில்பதிவு செய்யப்பட்ட உப்பளத்தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், புதிய பள்ளிமற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கஏற்பாடு செய்யப்படும். வருவாய் மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago