விருத்தாசலம்: ‘புரட்சிக் கலைஞர்’, ‘கேப்டன்’ என்ற அடைமொழிகளில் அழைக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது அரசியல் பயணத்தை தான் பிறந்த மண்ணான மதுரையில் தொடங்கினாலும், அதற்கான அங்கீகாரத்தை வட மாவட்டமான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பெற்றார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை களமிறக்கி, அதில் தானும் ஒருவராக, ‘பாமகவின் கோட்டை’ என்று அழைக்கப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார்.
போட்டியிட்டபோது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அவர்களுடன் கூட்டணி வைத்தவர்கள், தள்ளி நின்று ஆதரவு தந்தவர்கள் என அனைவருக்கும் விஜயகாந்த் வரவு சற்று பீதியை ஏற்படுத்த, அனைத்து தரப்பிலும் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. விருத்தாசலம் தொகுதியில் அவரை விமர்சிக்காத மேடைகள் இல்லை. ‘நடிகன் நாடாள்வதா!’ என்ற விமர்சனம் பலமாக முன்வைக்கப்பட்டது. ‘விஜயகாந்த் கட்சிக்கென்று எந்த கொள்கையும் இல்லை’ என்றெல்லாம் பேச, ‘மக்களுக்கு நல்லது செய்வது ஒன்றே என்கொள்கை; அதைத் தாண்டி எதுவும் கொள்கையாக தெரியவில்லை’ என்று கூறி பிரச்சாரத்தில் இறங்கினார்.
தென்மாவட்டத்துக்காரரான விஜயகாந்த், ‘மதுரையில் நின்று, சுலபமாகவெற்றி பெறலாமே!’ என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. விருத்தாசலம் தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்தது ஏன்? என அப்போது பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். ‘விஜயகாந்த் இறை நம்பிக்கையில் ஈடுபாடு கொண்டவர், அவரது ராசி எண் 5. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 5 கோபுரங்கள் உள்ளதால், அவரைவிருத்தாசலத்தை தேர்வு செய்ய ஜோதிடரீதியாக வழிகாட்டிருக்கின்றனர்’ என்றெல்லாம் பேச்சு எழுந்தது.
ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி, “நான் தமிழகத்தின் எங்கு போட்டியிட்டாலும், வெற்றி பெறுவேன். அதை நிரூபிக்கவே நான் விருத்தாசலத்தில், என்னை எதிர்ப்பவர்களுக்கு மத்தியில் கடும் போட்டியை எதிர்கொண்டு நிற்கிறேன்” என்ற தன்னம்பிக்கையோடு பேசி விஜயகாந்த் களமிறங்கினார்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “சினிமா நடிகரான விஜயகாந்த் சென்னையில் வசித்துக் கொண்டு,எப்படி இங்கு வந்து மக்கள் பணியாற்றுவார்?” என பல இடங்களில் எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரபடுத்தப்பட்டன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ‘விருத்தாசலம் பாமக கோட்டை’ என்பதை மாற்றி, வெற்றி பெற்றார்.
விருத்தாசலத்தில் வெற்றி பெற்றவுடன், சென்னையிலேயே முடங்கி விடாமல், மாதம் ஒருமுறை விருத்தாசலம் வருவதை வாடிக்கையாக்கி, தொகுதிவாசிகளிடம் மனுக்களைப் பெற்று, அதற்கு தீர்வுகளை தன்னால் இயன்ற வரையில் கண்டார். தொகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசை எதிர்பாராமல், சொந்த செலவிலேயே பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யத்தொடங்கினார்.
குறிப்பாக முதனை, வீராரெட்டிக்குப்பம், கோட்டேரி, மங்கலம்பேட்டை பகுதிகளில் நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகளை அமர்த்தி குடிநீர் விநியோகம்செய்தார். விருத்தாசலத்தில் கணினிப் பயிற்சிமையம் அமைத்து, வேலையற்ற இளையோருக்கு பயிற்சி அளிக்கச் செய்தார். ஒவ்வொரு கிராமமாகச் சென்று, அங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து, தனது உதவியாளர் மூலம், அரசு அதிகாரிகளை வரவழைத்து அப்பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தினார்.
அதேபோன்று, கோயில் திருப்பணிக்கோரி வருவோரிடம் நன்கொடை அளிப்பதோடு நிறுத்திவிடாமல், அதற்கான பணி நடைபெறுகிறதா என்பதையும் தொகுதி ஆய்வின் போது உறுதி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விருத்தாசலம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மழைக் கோட், கையுறை உள்ளிட்டவற்றை வழங்கியதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.
தனது பிறந்தநாளை தொகுதியில் கொண்டாடி, அங்கு தொகுதிவாசிகளை வரவழைத்து, மனுக்களை பெற்று, உணவளித்து வழியனுப்பி வைத்தார். இவ்வாறாக விருத்தாசலம் தொகுதி முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி, தொகுதிவாசிகளின் அன்பைப் பெற்றார் விஜயகாந்த்.
இன்றைக்கும் தொகுதிவாசிகளின் மனங்களில் அவர் வீற்றிருக்கிறார் என்பதை, நகரின் பல்வேறு பகுதியில் அவருக்காக கடந்த இரு நாட்களாக வைக்கப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி ப்ளக்ஸ் பேனர்களும், சாலைகள், வீதிகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் நடைபெறும் அஞ்சலிக் கூட்டங்களும் பறைசாற்றுகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
21 hours ago