விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி: தீவுத்திடலில் குவியும் பிரபலங்கள்; கண்ணீர் மல்க பொதுமக்கள் பிரியாவிடை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் மேடையில் உள்ள விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிச் செல்கின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர். தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும்கூட ரசிகர்கள் வந்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த சிலர் விஜயகாந்த் தமிழக முதல்வராக வந்திருக்கலாம். மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிட்டனர் என்று கூறினர்.

விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மதியம் 1 மணியளவில் தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி: விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மகன்கள் சண்முகபாண்டியன், பிரபாகரன், மைத்துனர் சுதீஷுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் வந்திருந்தனர். பின்னர் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடியின் முழுமையான அன்பைப் பெற்ற விஜயகாந்த் ஏழைகளின் பங்காளன். அவரின் புகழ் என்றும் ஓங்கியிருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கேப்டன் இளகிய மனம் கொண்டவர். அவர் மறைவு வருத்தமளிக்கிறது. அரசியலில் மனிதநேயத்துடன் உள்ள தலைவரை நாம் பார்க்கமுடியாது. அப்படிப்பட்டவரை இழந்துவிட்டோம். கடைசி முறையாக அவருடைய முகத்தை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று வந்துள்ள தொண்டர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். தன் பணத்தால் மக்களுக்கு உதவிய தலைவரை இழந்துவிட்டோம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு, தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பிரதமர் மோடி உடனடியாக இரங்கல் குறிப்பு பதிவிட்டதோடு, நம்மை நேரடியாக இங்கே அனுப்பிவைத்தார். ஆளுநர் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளேன்” என்றார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்: விஜயகாந்த் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். ”விஜயகாந்தின் புன்சிரிப்பை மறக்க முடியாது. அவர் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி தமிழீழ விடுதலை வேட்கைக்கு வடிவம் கொடுத்தவர்” என்று அவர் கூறியுள்ளார்.

தேவா முதல் பார்த்திபன் வரை.. இசையமைப்பாளர் தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “நான் பார்த்த வள்ளல் விஜயகாந்த் தான். அற்புதமான மனிதர்” என்றார். இயக்குநர், நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இயக்குநர், நடிகர் சுந்தர்.சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துச் சென்றனர். மாமனிதர் என்றால் அது கேப்டன்தான் என்று சுந்தர்.சி-யும், சொக்கத்தக்கம் என்றால் அது விஜயகாந்துக்கே செல்லும் என்று குஷ்புவும் புகழஞ்சலி செலுத்தினர். இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசுகையில், “நான் விஜயகாந்த் என்ற நடிகரைவிட அவருடைய மனிதநேயத்துக்கு மிக்கப்பெரிய ரசிகன்” என்றார்.

நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்களுடன் பேசி ஆறுதல் கூறினர். ஓ.பன்னீர்செல்வத்துடன் புகழேந்தி வந்திருந்தார். அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “2011-ல் ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். ஈகை குணம் கொண்டவர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்” என்று நினைவுகூர்ந்தார்.

ரஜினிகாந்த் இரங்கல்: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்து மிகப் பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர் எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது. விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்” என்றார். தொடர்ந்து ரஜினிகாந்த் சென்னையில் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்நிதி, லிவிங்ஸ்டன் அஞ்சலி: இன்று காலை தீவுத்திடலுக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் அருள்நிதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர் லிவிங்ஸ்டன் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை சொந்தச் செலவில் நடிகராக்கியவர். என்னை ஒரு நடிகராக அங்கீகரித்து வளர்த்தெடுத்து, சம்பாதிக்க வைத்து வாழவைத்தவர்” என்றார்.

ராம்கி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்: நடிகர் ராம்கி செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்துடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார். அந்தப் படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்துக்கு பெயர் கேப்டன். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் அனவருமே கேப்டன் ஷாட்டுக்கு ரெடியா, கேப்டன் வந்துட்டாரா? என்றுதான் பேசுவோம். கொஞ்ச நாளில் அது அவரது ஆஃபீஸ் வரை நீண்டது. அங்கே போன் செய்து கேப்டன் கிளம்பிட்டாரா எனக் கேட்பார்கள். அந்தப் படம் முடிந்தும் கேப்டன் என்றே அவரை எல்லோரும் வாஞ்சையோடு அழைத்தோம். கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பின்னர் அந்தப் பெயர் அவரின் அடையாளமாகிவிட்டது என்றார்.

கண்கலங்கிய ரஜினிகாந்த்: சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலிக்கு செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கன்னியாகுமரி படப்பிடிப்பில் இருந்து இங்கே வருகிறேன். மனம் மிகவும் கனக்கிறது. விஜயகாந்த் பற்றி பேச எவ்வளவோ இருக்கிறது. நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். ஒருமுறை பழகிவிட்டால், வாழ்க்கை முழுக்க அதனை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர்.

நண்பர்கள் மீது கோபப்படுவார். அரசியல்வாதிகள் மீது கோபப்படுவார். ஊடகங்கள் மீது கூட கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. காரணம் அவரது கோபத்தில் சுயநலம் இருக்காது. தைரியத்துக்கும் வீரத்துக்கு இலக்கணமானவர்.

கேப்டன் அவருக்கு பொறுத்தமான பெயர். 71 பால்களில், நூற்றுக்கணக்கான சிக்சர்களை குவித்து, மக்களை மகிழ்வித்து விக்கெட்டை இழந்து இந்த உலகம் என்னும் ஃபீல்டை விட்டு போய்விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் போன்றோர். வாழ்க விஜயகாந்த் நாமம்” இவ்வாறு ரஜினி நா தழுதழுக்க உருக்கமாக பேசினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE