தமிழர் உரிமைக்கு போராடிய ‘கேப்டன்' விஜயகாந்த்

By கி.கணேஷ்

சென்னை: 1984-ல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விஜயகாந்த், ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். 1986-ம் ஆண்டிலும் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக சென்னையில் விஜயகாந்தும், அவரது ரசிகர் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் தவிர்த்தார்.

1982-ல் தனது ரசிகர் மன்றத்தை ‘தமிழ்நாடு விஜயகாந்த தலைமை ரசிகர் மன்றம்’ என மாற்றிய பின்னர்,பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 2000-ம் ஆண்டில் ரசிகர் மன்றத்துக்கு தனி கொடியை அறிமுகப்படுத்தினார். 2002-ல் பாமகவுக்கும், விஜயகாந்துக்கும் தொடங்கிய மோதல், 2005-ல்தேமுதிகவை தொடங்கச் செய்தது. தொடர்ந்து அரசியலில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்தார் விஜயகாந்த்.

அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரச்சினை ஏற்பட்டது. பேரவையில் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து வந்த குரலால் கொதிப்படைந்த விஜயகாந்த், நாக்கை துருத்திக் கொண்டு அதிமுகவினரை எச்சரிக்க, பெரும் மோதலாக வெடித்தது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைத்த மக்கள்நலக் கூட்டணியில் இணைந்தபோது, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்ததேர்தலில் அவரது கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதற்குப்பிறகும் தேமுதிக எந்த வெற்றியையும் பெறவில்லை.

ஆனாலும், கட்சித் தொண்டர்களைப் பார்த்தால் பரவசமாகிவிடுவார் விஜயகாந்த். அரசியலில் வெள்ளந்தியான தலைவராகவும், தவிர்க்க முடியாத மாற்று சக்தியாகவும் திகழ்ந்த விஜயகாந்த், அரசியல் உலகில் என்றும் விடிவெள்ளிதான்.

திரையுலகில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்து, தனிக்கட்சியைத் தொடங்கி மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்த விஜயகாந்தை ‘கருப்பு எம்ஜிஆர்’ என்றே அவரது தொண்டர்கள் அழைத்தனர். எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேறிய பின்னர், தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதிமுகவைத் தொடங்கினார். அதே பாணியில் ரசிகர் மன்றம் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்தியவர் விஜயகாந்த்.

மேலும், மக்களுக்கு உதவும் பண்பிலும், எம்ஜிஆரின் கொடைத்திறனைப் பின்பற்றி வாழ்ந்தார். திமுகவை எதிரியாக கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஆனால், அவர்எதிரியாக நினைத்த திமுகவுடன்,அவர் உருவாக்கிய அதிமுகவையும் எதிரியாகக் கருதி அரசியல் களத்தில் வளர்ந்தார் விஜயகாந்த். 2006 முதல் தேமுதிகவுக்கு இருந்தவாக்கு சதவீதத்தின் வளர்ச்சி மூலம், அவர் விரைவில் ஆட்சியைப் பிடிப்பார் என்றே அனைவரும் கருதினர். அவரது உடல்நிலை மற்றும் அரசியல் சூழல்ஒத்துழைத்திருந்தால், அவர் அசைக்க முடியாத, தவிர்க்க முடியாத சக்தியாக தமிழக அரசியல் களத்தில் இருந்திருப்பார்.

தமிழர் நலனே முக்கியம்: நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களில் அதிக அளவில் முனைப்புக் காட்டியவர் விஜயகாந்த். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.

மேலும், ஈழத் தமிழர் உரிமைக்கான போராட்டம், ஊழலுக்கு எதிரானப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி உழைத்தவர் விஜயகாந்த்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE