திருவள்ளூர் மாவட்ட விவசாயியுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்புணர்வு நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட விவசாயியுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயனடைந்தவர்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 6 பேரை மத்திய அரசு, ’நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட ஏற்கெனவே தேர்வு செய்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர் களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவிவசாயி ஹரிகிருஷ்ணன் (43).

இதையடுத்து, திரூர் வேளாண் அறிவியல் நிலையம் மூலம், பெருமாள்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று முன் தினம் ’நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயி ஹரிகிருஷ்ணனிடம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர், ஹரிகிருஷ்ணனிடம் ’நீங்கள் மத்திய அரசின் எந்தெந்த திட்டங்களில் பயனடைந்துள்ளீர்கள்? எப்படி விவசாயத்துக்கு வந்தீர்கள்? போன்ற விவரங்களை கேட்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய ஹரிகிருஷ்ணன், “விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் பிஎஸ்சி (கணினி பொறியியல் ) படித்து, தனியார் வங்கி ஊழியராக 2 ஆண்டுகள் பணிபுரிந்தேன். இந்நிலையில், கடந்த 2000 -ல்எனது தந்தை மறைந்ததையடுத்து, முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். மத்திய அரசு திட்டங்களான பி.எம் கிசான் திட்டம், பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டம், பி.எம் கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டங்களில் பயனடைந்துள்ளேன்.

அதோடு, நீர் மூலம் கரையும் உரங்களை பயிர்களுக்கு டிரோன் மூலம்தெளிக்கவும் பயிற்சி பெற்று வருகிறேன். நவீன முறையில் பயிர் சாகுபடி உற்பத்தி செய்யும் வகையில் வேளாண், தோட்டக்கலைத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் மூலம்பயிற்சியும் பெற்றுள்ளேன்’’ என்றார். அதற்கு பிரதமர், ‘’நமது நாட்டின்முதுகெலும்பாக விவசாயிகள் உள்ளீர்கள். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உங்களை போன்றுமக்கள் அனைவரும் அறிந்து கொண்டுபயன்பெற வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் பி.பொ.முருகன், திரூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பானுமதி பங்கேற்றனர். பிரதமர் தன்னிடம் உரையாடியது குறித்து ஹரிகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE