சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவையடுத்து, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் வேதனை தெரிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானதை அடுத்து, அவரது உடல் கோயம் பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். நேரம் போக போக தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. அப்போது முன்வாசலில் குவிந்திருந்த தொண்டர்களுக்கு போலீஸார் ஒலிப்பெருக்கி மூலம் தக்க அறிவுறுத்தல்களை வழங்கி கட்டுக்குள் வைத்திருந்தனர்.
தலைமையகத்தின் வாயிலில் இருந்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் விஜயகாந்தின் உடல் தலைமையகத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் வரும் வழியில் கொண்டு வரப்பட்டது. அதுவரை கட்டுக்குள் இருந்த தொண்டர்கள், முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது போலீஸாருக்கு மிகுந்த சவாலாகவே இருந்தது. தொடர்ச்சியாக பலமுறை தள்ளு முள்ளு ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வழியிலும் தொண்டர்கள் நுழைய முயன்றபோதும் போலீஸார் கட்டுப்படுத்தினர்.
தொண்டர்கள் முண்டியடிப்பதும், போலீஸார் கட்டுப்படுத்துவதும் என இரவு வரை இதே நிலை நீடித்தது. மிகப்பெரிய தலைவருக்கு குறுகிய இடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர். மேலும், ஆண்களுக்கு இணையான அளவில் அஞ்சலி செலுத்த குவிந்த பெண்களும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
» ‘என்றும் நினைவுகூரப்படுவார் விஜயகாந்த்’ - ஆளுநர்கள் இரங்கல்
» மறையாத நினைவுகள்... மக்களின் மனம் கவர்ந்த கருப்பு எம்.ஜி.ஆர்!
அதே நேரம், இறுதியாக தங்களது கேப்டனை அருகில் பார்க்க முடியவில்லை எனவும் தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர். மக்கள் சிரமப்பட்டு அஞ்சலி இது தொடர்பாக அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் தேமுதிக அலுவலகத்துக்கு வெளியே நிற்கிறார்கள்.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சிரமப்பட்டு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு கைக்கூப்பி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.
தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக ராஜாஜி அரங்கத்தில் விஜயகாந்த் உடலை வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நாளை (இன்று) பாஜக மூத்த தலைவர்களும் வர இருக்கிறார்கள்.
எனவே, பெரிய அளவு கூட்டம் கூடும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் விஜயகாந்த் உடலை வைக்க வேண்டும்” என்றார்.விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சுவர் ஏறி குதித்த தொண்டர்கள்: தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தையொட்டி உள்ள 2 மேம்பாலங்களின் மீது ஏறி நின்று பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேமுதிக அலுவலகத்துக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், உள்ளே நுழைந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் சில தொண்டர்கள் சுவர் ஏறிக் குதித்து கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
‘என்னயா காசு.. காசு...’ டிரெண்டாகும் பேச்சு: விஜயகாந்தின் வாரிக் கொடுக்கும் குணம் குறித்து பேசும்போது அவரது பொதுக்கூட்டத்தின் உரை தவிர்க்க முடியாதது. அந்த பொதுக்கூட்டத்தில், “என்னயா காசு.. காசு.. காசு.. பணம்... அட போங்கயா நீங்களும் உங்க காசும். கோடி கோடியா சேர்த்து வச்சு எங்கயா கொண்டு போக போறீங்க... மக்கள் கொடுத்தது எடுத்தா எடுத்துட்டு போகட்டும். எனக்குனு ஒரு இடம் இருக்கும்ல... நாங்க 4 பேர் வந்தா ஒரு வேளை சோறு போட மாட்டீங்களா? என கூறியிருப்பார். அந்த காணொலி நேற்று அதிகளவு பகிரப்பட்டது.
நிறைவேறாத ஆசை: பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக ஒரு வீட்டை விஜயகாந்த் கட்டி வந்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வடைந்த நிலையில், அண்மையில் மீண்டும் பணிகள் வேகமெடுத்தன.
தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே பால் காய்ச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தால் பங்கேற்க முடியவில்லை எனத் தெரிகிறது. அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி செலுத்திய தலைவர்கள்: தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநாவுக்கரசர் எம்.பி. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன்;
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், வி.கே.சசிகலா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நடிகர்கள் சத்யராஜ், நாசர், பாண்டியராஜன் பிரபு, விக்ரம் பிரபு, கவுண்டமணி, அர்ஜூன், விஜய்சேதுபதி, மாதவன், நிழல்கள் ரவி, ஆரி, கருணாஸ், சூரி, ஷாம், ஆனந்த்ராஜ், விமல், அதர்வா, தியாகு, சதீஷ், ரோபோ சங்கர், விஜயகுமார்;
நடிகைகள் கவுதமி, சங்கீதா, கோவை சரளா, ஆர்த்தி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், விக்ரமன், பி.வாசு, அமீர், லிங்குசாமி, கவுதமன், பேரரசு, மாரி செல்வராஜ், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட அரசியல், சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago