சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71), உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், அவ்வப்போது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதால், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், அவரை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து, செயற்கை சுவாசம் அளித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே, நுரையீரலில் பிரச்சினை ஏற்பட்டதால், அதற்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 23 நாள் சிகிச்சைக்கு பிறகு, விஜயகாந்த் கடந்த 11-ம் தேதி வீடு திரும்பினார்.
இந்த நிலையில், அவருக்கு கடந்த 26-ம் தேதி இரவு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், உடனடியாக மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுசென்று, வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
» “கேப்டன் விஜயகாந்த் தங்கமான மனுஷன்” - விருத்தாசலம் பெண்ணின் கவனம் ஈர்த்த ஃபேஸ்புக் பதிவு
» நள்ளிரவு கடந்தும் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்
நேற்று அதிகாலை 2 மணிக்கு பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமானது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலை 6.10 மணி அளவில் அவர் காலமானார்.
பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் கதறி அழுதனர்.
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., ஏஎம்வி பிரபாகர ராஜா எம்எல்ஏ, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, சசிகலா மற்றும் நடிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
‘ஈடுசெய்ய முடியாத வெற்றிடம்’: விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழ் திரைப்பட உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த அவரது வசீகர நடிப்பு திறன் பல கோடி மக்களின் இதயங்களை கவர்ந்தது. அரசி யல் தலைவராக மக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்த அவருடன் பல ஆண்டுகளாக நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்தசோகமான தருணத்தில், என் எண்ணமெல்லாம் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், ஆதரவாளர்களுடனேயே உள்ளது. ஓம்சாந்தி’ என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி: விஜயகாந்த் கடந்த 14-ம் தேதி திருவேற்காட்டில் நடந்த தேமுதிக செயற் குழு, பொதுக்குழுவில் பங்கேற்றார். அப்போதே, அவர் சற்று உடல்நலம் குன்றிதான் காணப்பட்டார். ஆனாலும், மேடையில் அவரை பார்த்ததும், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், இரண்டே வாரத்தில் அவர் காலமானது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு, விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் உடல் அடக்கம்: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீவுத்திடலில் அஞ்சலி: பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், கலைத் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, விஜயகாந்த் உடல், சென்னை தீவுத்திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் சென்றடையும் என்று தேமுதிக அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago