தென்மாவட்ட வெள்ள பாதிப்பும், செங்கல் சூளைகளும் - சூழலியல் பார்வை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி வெள்ள பாதிப்புகளுக்கு சட்டவிரோத செங்கல் சூளைகளும் முக்கிய காரணமாக இருந்ததாகவும், கட்டுக்கடங்காமல் மணல் சூறையாடப்பட்டதால் கரைகள் எளிதில் உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு சொந்தமாக, தமிழகத்துக்கு உள்ளேயே பாயும் ஒரே நதி என்ற பெருமை மிக்க தாமிரபரணி ஆறு தென்மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு படியளக்கும் அட்சயபாத்திரமாகவும் விளங்கி வருகிறது. கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பலகோடி மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வட்டாரங்களிலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டது பாதிப்புக்கு காரணமாக சொல்லப்பட்டது. அதன் கரைகள் ஆங்காங்கே உடைப்பெடுத்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றுப் புறம்போக்கிலும், ஆற்றை ஆக்கிரமித்தும் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

செங்கல் சூளைகள் செயல்பட்டுவந்த இடங்களில் ஆற்றுக்குள் இருந்து மிக அதிகளவில் சவட்டு மணல் எனப்படும் குறுமணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரைகள் பலமிழந்து காணப்பட்டன. ஆற்றங்கரையோரத்தில் நின்றிருந்த நூற்றாண்டு கண்ட தேக்கு, மருது உள்ளிட்ட மரங்களை வெட்டி சூளைகளுக்கு விறகாக்கிவிட்டனர்.

இதனால் பெருமளவுக்கு மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோரங்களை சேதப்படுத்தி வாகனங்கள் செல்வதற்காக சாலைகளையும் அமைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களும் வெள்ளப் பாதிப்புக்கு முக்கியமாக இருந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பந்துறை, குறுந்துடையார்புரம், வெள்ளக்கோவில், சீவலப்பேரி உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, முத்தாலங்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், முக்காணி, ஆத்தூர் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களிலும் ஆற்றங்கரையோரத்தில் அனுமதி பெறாத செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த செங்கல் சூளைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. தாமிரபரணி வெள்ளப் பாதிப்புக்கும், மணல் கொள்ளைக்கும், மரங்களின் மரணத்துக்கும் காரணமான இந்த செங்கல் சூளைகள் மீண்டும் செயல்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி வரதராஜபுரம்.

இது தொடர்பாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலர் ஐகோ கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிகழ்ந்த பெருவெள்ள பாதிப்புக்கு செங்கல் சூளை ஆக்கிரமிப்பு முக்கிய காரணம். சட்டவிரோத செங்கல் சூளைகளுக்காக ஆற்றின் கரைகளை உடைத்து கனரக லாரிகளை இறக்கி சவட்டு மணலை எடுத்து வருகிறார்கள். ஆற்றங்கரைகளில் நின்ற மரங்களையும் வெட்டி வீழ்த்திவிட்டனர்.

எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து சூளைகளையும் அப்புறப்படுத்த வேண்டும். சூளை உரிமையாளர்களுக்கு புறம்போக்கு நிலத்தை பட்டாபோட்டு கொடுத்த வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குருந்துடையார்புரம், வெள்ளக்கோவில், சீவலப்பேரி, முத்தாலங்குறிச்சி, உமரிக்காடு கஸ்பா கிராமம், வரதராஜபுரம், பராங்குசநல்லூர், தெற்கு தோழப்பன் பண்ணை, கலியாவூர், முக்காணி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள செங்கல் சூளைகளை இனிமேல் நடத்தாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்