அஞ்செட்டி அருகே குந்துக்கோட்டையில் குறுகிய பாலத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: அஞ்செட்டி அருகே குந்துக்கோட்டையில் ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அஞ்செட்டி அருகே குந்துக்கோட்டையில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வழியாக அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, உரிகம், நாட்றாம்பாளையம், ஒகேனக்கல். உள்ளிட்ட பகுதிகளுக்குத் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

குறுகிய சாலையில் உள்ள இப்பாலத்தின் மையப்பகுதியில் இருபுறம் வாகனங்கள் செல்ல வசதியாகத் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாலத்தின் முன் சாலை வளைவு உள்ளது. இதனால், பாலத்தின் வழியாக எதிரும், புதிருமாகச் செல்லும் வாகனங்கள் மெதுவாக பாலத்தைக் கடக்கும் நிலையுள்ளது. மேலும், சாலை வளைவு, பாலம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால், வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி இப்பகுதியில் விபத்தில் சிக்கும் நிலையுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: குந்துக்கோட்டை பகுதிக்கு இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் குறுகிய பாலம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் தடுக்க பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பாலத்தை ஆய்வு செய்து, வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல வசதியாக குறுகிய பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். மேலும்,சாலை வளைவு மற்றும் பாலம் தொடர்பாக எச்சரிக்கை பலகையைச் சாலையின் இருபுறமும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE