குளத்தின் உபரி நீரை வெளியேற்ற தொடங்கப்பட்ட பணிகள்: ஆமை வேகத்தில் நகருவதால் அவதி @ நாமக்கல்

By கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறுவதற்காக தொடங்கப்பட்ட பணிகள் 5 மாதங்களாகியும் தொடங்கிய நிலையிலே இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் பூங்கா சாலையில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் ஒரு பக்க கரை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக குளம் நிரம்பி, அதன் முழுக் கொள்ளளவை எட்டியது.

உபரி நீர் பூங்கா சாலை மற்றும் பேருந்து நிலைய சாலை வழியாக வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் குளத்தின் உபரிநீரை பாதுகாப்பாக வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி ரூ.42 லட்சம் மதிப்பில் வடிகால் வசதி ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து பள்ளம் தோண்டும் பணிகளும் தொடங்கப்பட்டன.

எனினும், பணிகள் தொடங்கி 5 மாதங்களாகியும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இதனால் பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இத்திட்டப்பணி நடைபெறும் இடம் நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் விபத்து அபாயமும் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் விரைந்து பணியை முடிக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பணி நடைபெறும் பகுதியின் கவுன்சிலர் டி.டி.சரவணன் கூறுகையில், இந்தப் பணி நகராட்சி மூலம் மேற்கொள்வதென்றாலும் நெடுஞ்சாலைத் துறை அனுமதி பெற வேண்டும். சமீபத்தில் அனுமதி பெறப்பட்டது. அதனால் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்கப்படும். இந்த திட்டப்பணி ரூ.42 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE