பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினால் செந்தில் பாலாஜி நிலைதான் ரங்கசாமிக்கு ஏற்படும்: காங்கிரஸ்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பாஜக கூட்டணியை விட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறினால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நிலைதான் ரங்கசாமிக்கு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி விமர்சித்தார்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் 139-ம் ஆண்டு அமைப்பு தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேரு, காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமை வகித்து, ஏழைகளுக்கு தையல்மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: ''மத்திய பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோதமாக செயல்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

மோடியை கண்டு ரங்கசாமி பயப்படுகிறார். மோடியை காட்டி நமச்சிவாயம், ரங்கசாமியை மிரட்டுகிறார். துணைநிலை ஆளுநர் தமிழிசையும் ரங்கசாமியை மிரட்டுகிறார். இதனால் பாஜக கூட்டணியை விட்டு ரங்கசாமி வெளியே வரவே மாட்டார். அவர் வெளியே வந்தால் தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ரங்கசாமிக்கு ஏற்படும்.

பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லாதீர்கள் என நான் ரங்கசாமியிடம் சொன்னேன். ஆனால், அவர் கேட்கவில்லை. சேராத இடத்தில் சேர்ந்தால் இந்த நிலைமைதான் ஏற்படும். நான் எப்போது ரங்கசாமியிடம் கூறினேன் என நினைக்கலாம். துணைநிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றபோது எனது அருகில்தான் ரங்கசாமி அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டணிக்கு போகாதீர்கள் என கூறினேன். ஆனால் அவர் இதை கேட்கவில்லை. அதன்பிறகு அவர் என் பக்கம் திரும்பவும் இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் பிரீபெய்டு மின் மீட்டர் கொண்டுவரப்பட்டது என கூறியுள்ளார். இதை அவர் ஒரு வார காலத்தில் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் அரசியலை விட்டே விலக வேண்டும்.

அரிசி, சீருடை என அனைத்தையும் வாங்க வங்கிக்கணக்கில் பணம் தந்துவிட்டு லேப்டாப் மட்டும் அரசே வாங்கி தருவது ஏன்? ஏனெனில் கமிஷன் பெறமுடியாது என்ற காரணம்தான்” என்று அவர் குறிப்பிட்டார். விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE