“மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை மத்திய அரசை வலியுறுத்துவோம்” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். அதிகாரிகள் விரைவாக பணியாற்ற வேண்டும் என்பதே அரசு எண்ணம்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுவை அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான காலண்டரை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கூறியது: “அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் பல மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது. அரசின் காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். பல தொழிற்சாலைகளை சேதராப்பட்டு பகுதியில் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுவை மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

நலத்திட்ட உதவிகளை காலத்தோடு அரசு வங்கிகள் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு செலுத்தி வருகிறது. 40 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காப்பீடு திட்டம், பெண் குழந்தைகள் வைப்புத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி, லேப்டாப் விரைவில் வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுத்து முடித்து விட்டோம். டெண்டர் இறுதியாகிவிட்டது. வங்கி கணக்கில் பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவெடுக்கப்படும்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக ஒரு எம்எல்டி கடல்நீர் குடிநீராக்கும்திட்டம் செயல்படுத்தப்படும். இதன்பின் 50 எம்எல்டி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். புதுவை மாநிலத்தின் அனைத்து பிராந்தியமும் வளர்ச்சி பெற தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் உதவியோடு புதுவையை வளப்படுத்த தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தின் சாதக, பாதகம் அறிந்து திட்டம் செயல்படுத்தப்படும்.

புதுவை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கழித்துசெல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். கரோனா பரவல் குறித்து தீவிரமாக கவனித்து வருகிறோம். மத்திய அரசிடம் இருந்து கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்கள் இல்லை. தேவை ஏற்படுத்தும்போது சொல்வோம்.

அரசு அதிகாரிகள் விரைவாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும். அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரியில் மின்கட்டணத்தை இணை மின்சார ஒழங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கின்றனர். மத்திய அரசை நாடுவதை பற்றி கேட்கிறீர்கள். தேவை ஏற்படும்போது இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

மாணவர்களுக்கு தரப்பட்ட தரமில்லாத சைக்கிள்களை மாற்றித்தர ஒப்பந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பாஜகவிலிருந்து வெளியேவந்தால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி நிலைதான் ஏற்படும் என்று எம்.பி வைத்திலிங்கம் கூறியுள்ளதை கேட்கிறீர்கள். எந்த நிலைமையிலும் அது எங்களுக்கு ஏற்படாது. அந்நிலை எங்களுக்கு எப்போதும் இல்லை. நிர்வாகத்தில் வேகமாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக அதிகாரிகள் செயல்பட கூறுகிறோம். அதற்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அந்தஸ்தை ஒவ்வொறு முறையும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன். எங்கள் அரசு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. கூட்டணி அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இலவச அரிசி வழங்குவது குறித்தும் வலியுறுத்தி வருகிறோம். ரேஷன் கடை திறப்பது உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் தீர்வு மாநில அந்தஸ்துதான். புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை மத்திய அரசை வலியுறுத்துவோம்'' என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE