கண்ணீர் மழையில் கோயம்பேடு - விஜயகாந்த் உடலுக்கு தலைவர்கள், தேமுதிகவினர், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.

மறைந்த விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக, விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேடு வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு பொது மக்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, அங்கு ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாசலில் திரண்ட கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க விஜயகாந்தின் உடலை காணக் கூடினர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விஜயகாந்த் உடல் எடுத்துவரப்பட்ட வாகனத்தின் முன்பாக கண்ணீர்விட்டு அழதபடி அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் வந்தனர். வழிநெடுகிலும் விஜயகாந்தின் ரசிகர்கள், தேமுதிகவினர், கட்சித் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், என பலரும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரமாக ஊர்வலமாக வந்த விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, திரை உலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், தேமுதிக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Loading...

தேமுதிக அலுவலகத்தில் உடல் அடக்கம்: விஜயகாந்தின் உடல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.

பொது இடத்தில் அடக்கம் செய்ய கோரிக்கை: எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் எல்கே சுதீஷ் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பொது இடத்தில் அடக்கம் செய்யும் கோரிக்கை மறுக்கப்பட்டது.

தீவுத்திடலில்... - இந்தப் பின்னணியில், விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படவுள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி தேமுதிகவுக்கும், திரையுலகுக்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னை தீவுத் திடலில் நாளை (டிச.29) வெள்ளக்கிழமை காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத் திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்து, இறுதிச் சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்