ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கி, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அணியின் மாநில துணை தலைவர் ஜி.முத்துராமன் தலைமை தாங்கினார். பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கையில் கொப்பரை தேங்காயுடன், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஜி.முத்துராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளில் வாழ்வாதாரமாக தென்னை மரம் விளங்குவதால் மத்திய அரசு சார்பில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலமாக ஒரு கிலோ ரூ.108.60-க்கு கொப்பரை கொள்முதல் செய்கிறது. அந்தவகையில், தற்போதுள்ள கொப்பரை தேங்காய்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு உள்ளது.

எனவே, தமிழக அரசு அளித்த வாக்குறுதிப்படி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கொப்பரைகளை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தேங்காய் எண்ணெய்யாக மாற்றி பாமாயிலுக்கு பதிலாக விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE