குற்ற வழக்குகளில் குறித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: குற்ற வழக்குகளில் குறித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி மரணமடைந்தார். இதையடுத்து தனது கணவரின் இழப்புக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி வசந்தி சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் காப்பீட்டு நிறுவனம் தரப்பில், “முதல் தகவல் அறிக்கையில் விபத்து ஏற்படுத்திய லாரியின் பதிவெண் குறிப்பிடப்படவில்லை என்பதாலும், குறித்த காலக்கெடுவுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதாலும் இழப்பீடு கோர முடியாது” என வாதிடப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வசந்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, “குறித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விபத்து ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே வழக்கிலிருந்து விடுவித்து இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது” என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளரை எதிர் மனுதாரராகச் சேர்த்து, உரிய காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “இந்த வழக்கில் குறித்த காலத்துக்குள் குற்றப்பத்திரிகை செய்யாமல் இருந்தது தவறுதான். இது தொடர்பாகக் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

அதையடுத்து இந்த வழக்கில் மனுதாரர் வசந்தி குறிப்பிட்டுள்ள லாரி விபத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், “மற்ற குற்ற வழக்குகளைப் போல விபத்து வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகள் தீவிரம் காட்டுவதில்லை. இனிவரும் காலங்களில் குற்ற வழக்குகளில் குறித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், “அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது தொடர்பாகத் தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE