காலிப்பணியிடங்களை அயல்பணி மூலம் நிரப்ப தமிழக மின்வாரியம் திட்டம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கடன் சுமை அதிகரித்து வருவதால், களப் பணியாளர்கள், மின் கணக்கீட்டாளர்கள் பணியிடங்களை அயல்பணி மூலம் நிரப்ப மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு மின்வாரியத்தில் தற்போது 58,145 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 9,300 பணியிடங்கள் களப் பணியாளர் மற்றும் மின்கணக்கீட்டாளர் பணியிடங்கள் ஆகும். மின்வாரியத்துக்கு தற்போது ரூ.1.5 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த கடன் தொகை மேலும் அதிகரித்து வருகிறது. எனவே, காலிப் பணியிடங்களை அயல்பணி (அவுட்சோர்ஸ்) மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “மின்வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளாக புதிதாக ஆட்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, துணைமின் நிலையங்களில் ஓய்வுபெற்ற பொறியாளர்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மின்மாற்றிகளைப் பொருத்துதல், மின்கம்பங்கள் அமைத்தல், பூமிக்கடியில் கேபிள்கள் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான பணியாளர்கள் மற்றும் மின்கணக்கீட்டாளர் ஆகிய பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றனர்.

இதற்கு மின்வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “மின்வாரியத்தில் அயல்பணி மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவது தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானது. மேலும், வேலை தேடும் பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கான வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.

மேலும், மிகவும் ஆபத்தான துறையாக உள்ள மின்வாரியத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மின்வாரியம் பொறுப்பேற்காது. அத்துடன், தற்போது மின்வாரியத்தில் நிரந்தமாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலையும் ஏற்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE