பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு, பல்கலை. வளாகத்தில் சோதனை

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது வீடு மற்றும் பல்கலை. வளாகத்தில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொ) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஷ், திருச்சிபாரதிதாசன் பல்கலை. கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் கடந்த செப். 9-ம் தேதி கோவை நிறுவனப் பதிவாளர் அலுவலகத்தில் `பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் (PUTER FOUNDATION)' என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும், துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நான்கு பேரும் அதன் இயக்குநர்களாகவும் இருந்து, தலா ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளனர். பெரியார் பல்கலை. வளாகத்தில் இந்த நிறுவனத்துக்கான கட்டிடத்தை ஆட்சிமன்றக் குழு மற்றும் அரசு அனுமதியின்றி கட்டியுள்ளனர். மேலும், அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ஊழல்செய்ததாக பெரியார் பல்கலை.தொழிலாளர் சங்க கவுரவத்தலைவரும், சட்ட ஆலோசகருமான இளங்கோவன் (74), கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நால்வர் மீதும், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் நேற்று அதிகாலை 4 மணிக்கு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர் 7 நாட்களுக்கு சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணிக்குகையெழுத்திட வேண்டும் என்று நீதித்துறை நடுவர் (எண்-2) நிபந்தனை விதித்தார். இதன்படி, நேற்று காலை காவல் உதவிஆணையர் அலுவலகம் வந்த ஜெகநாதன், அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டுச் சென்றார்.

இதற்கிடையில், பெரியார் பல்கலை.யில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன் அலுவலகம், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது பங்களா, பதிவாளர் தங்கவேல் அலுவலகம், அவரதுவீடு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் நேற்று சோதனையிட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், தலைமறைவாக உள்ள பல்கலை. பதிவாளர் (பொ) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE