ஈரோடு - நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு: மத்திய ரயில்வே அமைச்சருக்கு அண்ணாமலை நன்றி

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு - நெல்லை ரயிலை செங்கோட்டை வரை நீட்டித்து ஒப்புதல் அளித்த மத்திய ரயில்வே அமைச்சருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு - நெல்லை (16845 / 16846) விரைவு ரயில் ஈரோடு மற்றும் நெல்லை மக்களுக்கு எளிதான பயணச் சேவையை வழங்கி வருகிறது. இந்த ரயில் சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் போது, அப்பகுதி மக்கள் அண்ணா மலையிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதையடுத்து, டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து, கோரிக்கை கடிதத்தை அவர் கொடுத்தார். இந்நிலையில், ஈரோடு - நெல்லை ரயிலை செங்கோட்டை வரை நீட்டித்து ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில், ‘ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழக பாஜகவின் கோரிக்கையை ஏற்று ஈரோடு-நெல்லை விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE