எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் “உலக எய்ட்ஸ் தினம் 2023” நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று தமிழகத்தில் முதல் முறையாக எச்ஐவி மற்றும் பால்வினை தொற்று கண்டறியும் பரிசோதனைக் கருவியை அறிமுகப்படுத்தி பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனம் மற்றும் எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்புகளின் சேவையை பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

பின்னர், சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி, எய்ட்ஸ் தொற்றை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்ற கருப்பொருள் அடங்கிய குறுந்தகடு மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு, மாநிலஅளவில் நடைபெற்ற விநாடி -வினா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். மேலும், மாநில அளவில் சிறைத்துறையில் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு சேவையை சேர்க்க இணைந்து பணியாற்றிய சிறைத்துறை டிஐஜி கனகராஜை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: உலகளவில் 3.9 கோடி பேரும், இந்திய அளவில் 23.48 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.30 லட்சம் பேரும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியஅளவிலான பாதிப்பு 0.24 சதவீதமாகவும், தமிழகத்தில் 0.17 சதவீதமாகவும் எச்ஐவி பாதிப்பு உள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் திறன்பட செயலாற்றுகிறது. அதற்காக மத்திய அரசு2022-23-ம் ஆண்டுக்கான பெரியமாநிலங்கள் அளவில் சிறந்த செயல்பாட்டுக்கான முதலிடம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது 1994-ல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடங்கியதிலிருந்து பெறப்பட்ட முதல் விருது ஆகும். மிக விரைவில் முதல்வரிடம் இந்த விருது சமர்ப்பிக்கப்படவுள்ளது. ரூ.90 லட்சம் செலவில் பால்வினைதொற்று கண்டறியும் பரிசோதனைக் கருவி தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறும்போது, “இந்திய அளவில், எய்ட்ஸ் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கடந்த 2010-ம்ஆண்டை ஒப்பிடுகையில் 72.5 சதவீதம் பாதிப்பை கட்டுப்படுத்தி உள்ளோம். மேலும், 89 சதவீத உயிரிழப்பும் தடுக்கப்பட்டுள்ளது. வரும், 2030-ம் ஆண்டுக்குள் முழுமையைாக எச்ஐவி, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE