எண்ணூர் வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு; அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை அவசியம்: அன்புமணி 

By செய்திப்பிரிவு

சென்னை: எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் அப்பகுதியில் உள்ள சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவி வருகிறது. அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் கடந்த காலங்களில் இதேபோல் பல முறை வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதே பாதிப்பை கோரமண்டல் நிறுவனமும் ஏற்படுத்தியதாகத் தான் கருத வேண்டியிருக்கும். இது குறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியமும், காவல்துறையும் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறாத ஆலைகளின் செயல்பாடுகளை, அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமோனியா வாயுக்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

அதுமட்டுமின்றி, எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வேதி ஆலைகளாலும், பிற காரணங்களாலும் அப்பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களைக் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்; அத்தகைய பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழுவிடமிருந்து 3 மாதங்களில் பரிந்துரை அறிக்கை பெற்று அதை முழுமையாக செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்