எண்ணூர் வாயுக் கசிவு | போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை - எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆலை வாயுக் கசிவு ஏற்பட்ட பைப்லைனை அடையாளம் கண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு பகிர்ந்திருந்தார். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அந்த அறிக்கையில், “எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆலையில் நேற்றிரவு (டிச.26) மிதமான அளவு அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் அதிகாலை 4.30 மணியளவில் சின்னகுப்பம், பெரியகுப்பம் கிராமங்களில் மக்கள் அமோனியா கசிவை உணர்ந்துள்ளனர். இதனையடுத்து அந்த நிறுவனம் வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்தையும், பைப்லைனில் எந்த அளவுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்து அது ஒரே நாளில் சரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆகையால் இந்த நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு சீரமைப்புப் பணிகளை நிறைவு செய்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அமோனியா எடுத்துச் செல்லும் குழாயின் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட CIL (கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடட் ) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமான நடைமுறையின்படி ஆலை இயங்கிக் கொண்டிருக்க டிச.26 11.30 மணியளவில் கடற்கரையோரத்தில் உள்ள அமோனியா பைப்லைனின் அசாதரண நிகழ்வைக் கண்டோம். இதனையடுத்து எங்களது குழுவினர் அமோனியா பைப்லைனை தனிமைப்படுத்தி குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்தனர்.

இந்த நடவடிக்கையின்போது அருகில் வசித்த மக்கள் சிலர் அசவுகரியங்களை உணர்வதாகத் தெரிவித்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி செய்யப்பட்டது. அனைவரும் பத்திரமாக உள்ளனர். இயல்புநிலை திரும்பியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் நிறுவனம் எப்போதுமே உயர்தர பாதுகாபு நடைமுறைகளைக் கொண்டு இயங்குகிறது. அதேபோல் சிறப்பான அவசர கால செயல்பாட்டுக் குழுவும் கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதையடுத்து தொழிற்சாலை மற்றும் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாயுக் கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல் துறை தகவல் அளித்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிலர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் அந்தப் பகுதி மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் எண்ணூரில் உள்ள உர ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும் ஆலையை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளதாகவும், அந்தக் குழு ஆய்வறிக்கை அளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE