தூத்துக்குடியில் சுகாதார பணிகள் தீவிரம்: எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. எலி காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் உள்ள 100-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள், குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வல்லநாடு மற்றும் பொன்னன்குறிச்சி பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகளில் குடிநீர் சேகரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் விநியோகம் செய்ய, சுகாதார குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

டேங்கர் லாரிகளில் தண்ணீருடன் குளோரின் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், வீடுகள் தோறும் குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கப்படுகிறது. ஒரு மாத்திரையை 20 லிட்டர் தண்ணீரில் சேர்க்கலாம். மாத்திரை சேர்த்த பிறகு 2 மணி நேரம் கழித்து அதனை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. எலி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக டாக்சிசைக்ளின் 100 எம்ஜி மற்றும் பாரசிட்டமால் ஆகிய 2 மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலி காய்சல் என்பது எலியின் சிறுநீரில் இருந்து பரவுகிறது.

தற்போது மழை வெள்ளத்தில் ஏராளமான எலிகள் இறந்து தண்ணீரில் மிதக்கின்றன. எனவே, எலி காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், அதனை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மாவட்டத்தில் இதுவரை எலி காய்ச்சல் எதுவும் கண்டறியப்படவில்லை. நடமாடும் மருத்துவக் குழுவினர் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE