கோவில்பட்டி: தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பகிர்மான குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கோவில்பட்டி நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
கோவில்பட்டி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1979-ம் ஆண்டு சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2-வது குடிநீர் திட்டம் கேட்டு கடந்த 2010-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் நகர்மன்ற உறுப்பினர் கே.சீனிவாசன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். அதன் பின் கோவில்பட்டி நகருக்கான 2-வது குடிநீர் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றில் 4 உறை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து 51 கி.மீ தூரம் கோவில்பட்டி வரை குழாய் பதித்து, கோவில்பட்டி நகருக்குள் 88 கி.மீ தூரம் பகிர்மான குழாய் அமைத்து, புதிதாக 10 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2-வது குடிநீர் திட்ட பகிர்மான குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோவில்பட்டி நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கழுகுமலை, கயத்தாறு மற்றும் வல்லநாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் பெறும் விளாத்திகுளம், எட்டயபுரம், மாசார்பட்டியிலும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து கோவில்பட்டி மார்க்சிஸ்ட் நகர்மன்ற உறுப்பினர் கே.சீனிவாசன் கூறியதாவது: 2-வது குடிநீர் திட்டத்தில் முழுமையாக பணிகள் நிறைவடையாமல், கடந்த 2018-ம் ஆண்டு அவசர கதியில் திறந்து வைக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கான பகிர்மான குழாய்கள் பதிக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் 50 சதவீதம் கூட பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை.
இதனால் முதலாவது கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக தான் நகராட்சியின் ஏராளமான இடங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் 2-வது குடிநீர் திட்ட குழாய்கள், மோட்டார்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிராக்டர்களில் குடிநீர் விநியோகிக்கப்படும் என, நகராட்சி அறிவித்துள்ளது.
சேதமடைந்த மோட்டார்களையும், உறை கிணறுகளையும், மின்னணு சாதனங்களையும் உடனடியாக பழுதுநீக்க வேண்டும். வெள்ளம் ஏற்படும்போது, பகிர்மான குழாய்கள் சேதமடைவதை தடுக்க வல்லுநர் குழு அமைத்து, அந்த குழுவின் பரிசீலனையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
“ தற்போது தான் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் வெளியே தெரிகின்றன. மோட்டார்களை பழுது நீக்கவோ அல்லது புதிய மோட்டார் வாங்கி பொருத்தவோ நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தில் சேதமடைந்த பகிர்மான குழாய்களும் சரி செய்யப்படும்” என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago