தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால், பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண தூத்து நிதியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின், டெல்லி சென்றபோது நேரில் வலியுறுத்தினார். இதையடுத்து. வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தென் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். பேரிடர்களின் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார். பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி மத்திய அமைச்சர் நிர்மலர் சீதாராமன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் வந்தார்.

முதலில், ஆட்சியர் அலுவலகம் சென்ற நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர், அவரது தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கூடுதல் ஆணையர் பிரகாஷ், அரசு துறை செயலர்கள் ககன் தீப் சிங் பேடி (சுகாதாரம்), அபூர்வா (வேளாண்மை), கார்த்திகேயன் (நகராட்சி நிர்வாகம்), மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர்கள் லட்சுமிபதி (தூத்துக்குடி), கார்த்திகேயன் (திருநெல்வேலி), தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி 72 பக்க மனுவை நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு அளித்தார். பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி குறிஞ்சி நகர், கோரம்பள்ளம் குளம், அந்தோணியார்புரம் பாலம், முறப்பநாடு கோவில் பத்து பகுதியில் சேதமடைந்த குடிநீர் நீரேற்று நிலையம், ஸ்ரீவைகுண்டம் கோயில், அரசு மருத்துவமனை, பொன்னன்குறிச்சியில் உள்ள வீடுகள், ஏரல் ராஜபதி பகுதியில் பயிர் பாதிப்பு, ஏரல் பாலம், வாழவல்லான் பகுதியில் உள்ள மின்கோபுரம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE