தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதி கனமழை: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினார். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்துள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக மக்களின் வாழ்வாதார உதவிக்காவும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மத்திய குழு ஆய்வு: இதையடுத்து, மத்திய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
» நடிகர் ரஜினியின் தூத்துக்குடி வருகையும், தென்மாவட்ட மக்களின் அதிருப்தியும்!
» திருஉத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்
ஆய்வுக் கூட்டம்: அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன், அங்கு வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வின் போது, தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமாக மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துக் கூறினர். மேலும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரண உதவி குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனுவை நிர்மலா சீத்தாராமனிடம் அளித்தார். அதன் விவரம் > “நிதி போதுமானது அல்ல...” - நிர்மலா சீதாராமனிடம் 72 பக்க மனு அளிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர்கள் கோ.லட்சுமிபதி (தூத்துக்குடி), கார்த்திகேயன் (திருநெல்வேலி), தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள ஆய்வு: தொடர்ந்து மாலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதி, சேதமடைந்த கோரம்பள்ளம் குளம், அந்தோணியார்புரம் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் சேதமடைந்த குடிநீர் நீரேற்று நிலையம், ஸ்ரீவைகுண்டம் கோயில், அரசு மருத்துவமனை, பொன்னன்குறிச்சியில் சேதமடைந்த வீடுகள், ஏரல் ராஜபதி பகுதியில் பயிர் சேத விவரங்கள், மின்கம்பங்கள் சேதம், ஏரலில் சேதம் அடைந்த பாலம், சேதமடைந்த வணிக நிறுவனங்கள் மற்றும் வாழவல்லான் பகுதியில் சேதமடைந்த மின்கோபுரம், தாமிரபரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அந்தந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமிழக அரசு உயர் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கி கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago