திறப்பு விழா கண்டும் முழுமையான பயன்பாட்டுக்கு வராத புதுச்சேரி முத்தியால்பேட் மார்க்கெட்!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை மார்க்கெட் கட்டி திறக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் முதல் தளம் முழுமையானபயன்பாட்டுக்கு வரவில்லை. அதேநேரத்தில் நெல்லித்தோப்பு மார்க்கெட் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. புதுச்சேரியில் முத்தியால்பேட்டை மார்க்கெட் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்தமார்க்கெட் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் புதுச்சேரி அரசு கடந்த 2010-ல்ரூ.1.16 கோடியில் புதிதாக கட்ட முடிவு எடுத்தது. இதில் 42 நிரந்தர கடைகள், 74 அடிக்காசு கடைகள், 68 மீன்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றி 12 மாதங்களில் கட்டுமானப் பணிகளை முடிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் வழக்கம்போல் இக்கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகள் நீடித்தது. இறுதியில் கடந்த 2017-ல் கூடுதல் நிதி சேர்க்கப்பட்டு, ரூ.2.63 கோடியில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக ஏற்கெனவே கடை வைத்திருந்தவர்களுக்கு ஒதுக்கி தரப்பட்டது. கூடுதலாக கட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட கடைகளை இ-ஏலம் மூலம் விட அரசு முடிவு எடுத்தது. ஆனால் புதிதாக கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் சிறிய அளவில் இருப்பதாக கூறி வியாபாரிகள் யாரும் கூடுதல் கடைகளை இ-ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் முதல் தளத்தில் இருக்கும் கடைகள் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளன.

கிடப்பில் போடப்பட்ட நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டுமானப் பணி

இதுபற்றி புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட அனைத்து கடைகளும் சிறிய அளவில் கட்டி கொடுக்கப்பட்டதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இதனால் கூடுதலாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. பலமுறை இ-ஏலம் விடப்பட்டது. அதில் இரு கடைகள் மட்டும் ஏலம் எடுக்கப்பட்டது. ஏற்கெனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முதல் தளத்தில் உள்ள கடைகளை ஒதுக்கியும், சிறிதாக இருப்பதால் பயன்படுத்தாமல் மூடி வைத்துள்ளனர். மீண்டும் இ-ஏலம் விட முடிவு எடுத்துள்ளோம்” என்றனர்.

ஓராண்டாகியும் தொடங்கப்படாத நெல்லித்தோப்பு மார்க்கெட்: நெல்லித்தோப்பில் உள்ள மீன் - இறைச்சி மார்க்கெட் கட்டிடம் புதிதாக கட்ட கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பில் சுமார் 50 இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகளை புதுச்சேரி நகராட்சி காலி செய்தது. விற்பனையாளர்கள் அருகிலுள்ள தெருவுக்கு மாற்றப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்பு கடந்த ஜனவரி மாதம் பழைய கட்டிடங்களை இடித்தது. பழைய கட்டிடங்களை இடித்து நான்கு மாதங்களில் கடைகளை கட்டுவதற்கு புதிய வளாகம் அமைத்து தருவதாக கடை உரிமையாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

நெல்லித்தோப்பு மீன் அங்காடியை இடித்து திரும்ப கட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், “கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. புதிய கட்டிடம் கட்ட எந்த அறிகுறியும் இல்லை. போதிய வசதிகள் இல்லாத இடத்தில் கடை வைத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தக்கூட இடம் இல்லை. கழிப்பறை இல்லை. மழையோ, கோடையோ கடும் பாதிப்பாக இருக்கிறது” என்றார். பொதுமக்கள் கூறுகையில், “மீன் - இறைச்சி சந்தையின் மேற்கூரை மோசமாக இருந்தது. கீழே விழுந்து சிலர் காயம் அடைந்தனர். அதையடுத்து அவசர அவசரமாக காலி செய்து இடித்துவிட்டனர். வாக்குறுதிப்படி நகராட்சி தரப்பில் கட்டிடம் கட்டவில்லை. தற்போது சாலையோரத்தில் தற்காலிக மீன்மார்க்கெட் வைத்துவிட்டனர். இது இப்பகுதி மக்களுக்கு சிரமத்தை உருவாக்குகிறது. முறையான கடைகளை அரசு அமைத்து தரவேண்டும்” என்கின்றனர்.

ஆனால் நகராட்சி தரப்பில், நிதி பிரச்சினையால்தான் காலம் தாழ்த்துவதாக குறிப்பிடுகின் றனர். அரசின் முன்திட்டமிடல் இல்லாததால் புதிய சந்தை கட்டுவதில் சிக்கல் நிலவுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். திட்டமிட்டு கட்டியும் முத்தியால்பேட்டை மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரவில்லை. கட்டிடம் கட்ட நிதி இல்லாமல் பணிகளை நிறுத்திவைத்துள்ளதால் நெல்லித்தோப்பு மீன் - இறைச்சிமார்க்கெட் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE