சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
தீர்மானங்களின் முழு விவரம்:
1. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் ஆளுமைத் திறனோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று கழகத்தை வழிநடத்தி வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
» தூத்துக்குடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
» “பாஜக ஏஜெண்டாக ஆளுநர் தமிழிசை அரசியல் செய்கிறார்” - நாராயணசாமி சரமாரி தாக்கு
2. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தன் உயிர் மூச்சாக முன்னிறுத்தி தொடங்கப்பட்ட `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிற மாபெரும் மக்கள் இயக்கம், மதுரையில் நடத்திய `கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
3. வட கிழக்குப் பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும்; ‘மிக்ஜாம்’ புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும்; காலத்தே மீட்புப் பணிகளை மேற்கொள்ளாமலும், மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு, புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்; பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. i) தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது வேண்டுமென்றே, திட்டமிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பச் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ii) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
5. மீனவர்கள் நலன் பாதுகாக்க, திமுக-வால் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் மற்றும் இலங்கை கடல் கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
6. மாநில உரிமைகள் பறிபோனதற்கு தி.மு.க-வே முழுமுதற் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மக்களின் கவனத்தை திசை திருப்பவும்; பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றவும், 16 பல்வேறு நாடக அரங்கேற்றங்களை நிகழ்த்தும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
7. சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்கும், திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
8. ஊழலில் திளைத்து நிற்கும் திமுக! `கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்’ என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாரக மந்திரம்; ஊழல் ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
9. சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கவும்; 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும், விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
10. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13.12.2023-ஆம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது; ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
11. ஈழத் தமிழர்கள் நலன் காக்க, ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
12. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக பெய்து நெற்பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
13. நெசவாளர்களின் வாழ்க்கை நலிவடையக் காரணமாக இருந்து, நெசவுத் தொழிலை விடுத்து மாற்றுத் தொழிலைத் தேடும் நிலையை ஏற்படுத்தி, தமிழ் நாட்டில் நெசவுத் தொழிலையும், நெசவுத் தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கத் தவறிய விடியா திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
14. சமூக நீதியை வாய்கிழியப் பேசும் திமுக, பட்டியலின மக்களுடைய நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறித்தும்; அனுபவிக்க முடியாமல் தடுத்தும்; அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை தட்டிப் பறிக்கும் வகையில் செயல்படும் விடியா திமுக அரசின் பட்டியலின மக்கள் விரோதப் போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
15. தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் வகையில், கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
16. i) தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. ii) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.
17. சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்து, சமூக நீதிக்கு எதிரான திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
18. தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் திமுக-வின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
19. `நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்; ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே `நீட் தேர்வு’ ரத்துதான் என்று விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினும், திமுக-வைச் சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளித்தனர். சொன்னதைச் செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய விடியா அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம்! எ தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறியும்; பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறியும்; வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நோய்த் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளைச் செய்யத் தவறியும், முடங்கிப் போயிருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
20. மக்கள் நலன் கருதி புரட்சித் தலைவி அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியது; சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தில் இருந்து ஆவின் பால் விலை வரை உயர்த்தி, மக்களை வஞ்சித்து வரும் சர்வாதிகார விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
21. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும்; புதிய அணை கட்டப்போவதாக நெருக்கடி கொடுக்கும் திமுக-வின் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருக்கும் கேரள அரசின் செயலை கண்டிக்காமலும்; அதைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்தாமலும் மெத்தனப் போக்கில் இருந்து வரும் மக்கள் விரோத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
22. ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தப்பட்டது.
23. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என உறுதி மேற்கொள்ளப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பேச்சு முழு விவரம்: கூட்டம் தொடங்கியதும் தன்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததுக்கு அதிமுக நிர்வாகிகளுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. உரையை தொடங்கியதுமே முதலில் அட்டாக் செய்தது உதயநிதி ஸ்டாலினை தான். அதிமுகவின் மதுரை மாநாடு குறித்து உதயநிதி விமர்சித்திருந்ததை கண்டித்து பேசிய இபிஎஸ், "அதிமுக மாநாடு ஆகஸ்ட் மாதம் மதுரையே குலுங்கும் அளவுக்கு நடந்து முடிந்தது. எதிரிகள் அஞ்சுகின்ற அளவுக்கு நடந்த மதுரை மாநாட்டை பற்றி, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியிருக்கிறார். உதயநிதி சொன்னதில் இருந்து திமுகவின் சேலம் மாநாடு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவை விமர்சிக்கும்போதே உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அரசியல் கத்துக்குட்டியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை" என்றார்.
இனி ஜெட் வேகத்தில் அதிமுக: அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒழிக்கவோ, முடக்கவோ, ஒடுக்கவோ முடியாது. சோதனை மேல் சோதனைகளை சந்தித்த கட்சி. எத்தனை வழக்குகள், எத்தனை சிக்கல்கள். அதிமுகவை முடக்க எதிரிகளோடு கைகோர்த்து துரோகிகளும் இணைந்து கொண்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அத்தனையும் வென்று காட்டினோம். ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடைபெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பதற்றத்தோடு பொதுக்குழுவில் நாம் சந்திப்போம். ஆனால் இந்த பொதுக்குழுவில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. நீதிமன்றத்திலும் நீதி வென்றுவிட்டது. தேர்தல் ஆணையத்திலும் நமக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்.
தமிழகத்திலேயே அதிக தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. அதிமுக அரசின் நடவடிக்கைகளால் தான் தமிழகம் இன்றைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. கரோனா காலத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றியது. ஆனால், சரியான முறையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் திணறிய அரசு திமுக அரசு. திமுக ஆட்சியில் பல உயிர்களை இழந்தோம்.
பொம்மை முதல்வர்: எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது 520 அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். ஆனால் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. செயலாற்றாத அரசாக திமுக அரசு உள்ளது. பொம்மை முதலமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆளுகிறார். அதனால் மக்கள் படுகின்ற துன்பம் ஏராளம். இந்த ஆட்சியின் சாதனை என்றால் ஊழல் செய்வதில் சாதனை படைத்துள்ளதை தவிர வேறு எதுவும் கிடையாது.
அண்மையில் ஒரு அமைச்சருக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்துள்ளது. இன்னும் பல அமைச்சர்கள் தண்டனை கிடைக்க காத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் முன்னணி வரிசையில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் பலரும் மக்களை பார்க்காமல், நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்கள். முதல்வர் ஸ்டாலினே அவருடைய கட்சியை பற்றி புலம்பிக்கொள்கிறார். இவர் எங்கு நாட்டுக்கு நல்லது செய்ய போகிறார். ஸ்டாலினுக்கு கட்சியையும் நடத்த தெரியவில்லை, ஆட்சியையும் நடத்த தெரியவில்லை. அதனால் தான் பொம்மை முதல்வர் என்கிறோம்.
திமுக அரசுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நிலை. திமுக அரசாங்கம் ஒரு அரசாங்கம் அல்ல. இது ஒரு குழு அரசாங்கம். எதற்கு எடுத்தாலும் ஒரு குழு அமைத்துவிடுவார். அதோடு எல்லாம் முடிந்துவிடும். குழு அமைப்பதுதான் இந்த முதல்வரின் வேலை.
புயல் பாதிப்புகள்: அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏகப்பட்ட இயற்கை சீற்றங்கள் வந்தன. ஆனால், புயல் பாதிப்பை புயல் வேகத்தில் செயல்பட்டு பாதிப்பின் அடிசுவடே தெரியாத அளவுக்கு அதிமுக பணி செய்தது. மிக்ஜாம் புயலின்போது திமுக அரசு திட்டமிட்ட செயல்படாத காரணத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் சென்னை தண்ணீரில் தத்தளித்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகத்தை மூடியது இந்த அரசு. இதனால், மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான உணவு கொடுக்க முடியவில்லை.
தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என முன்கூட்டியே அறிவித்தும், இந்த அரசாங்கம் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். எட்டு நாட்கள் ஆகியும் தென் மாவட்டங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார். வாக்களித்த மக்களை பார்க்க முதல்வருக்கு நேரமில்லை. வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கொடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்காததால் மக்கள் உயிரிழந்துள்ளனர். 2015 வெள்ளப் பாதிப்பு குறித்து தவறான தகவலை ஸ்டாலின் அளிக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் ஒருலட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது என பொய் சொல்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் 35,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும்.
மத்திய அரசின் கடமை: எப்போது பார்த்தாலும் நிதியில்லை எனக் கூறுகிறது திமுக அரசு. நிதி ஆதாரத்தை பெருக்க இந்த அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பணி ரூ.2,35,000 கோடி கடன் வாங்கியது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. மத்திய அரசு உதவியை எதிர்பார்க்க கூடாது. மத்திய அரசை குறை சொல்லி மாநில அரசு தப்பிக்க பார்க்கிறது. அதேபோல் மத்திய அரசும் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து தேவையான நிதி ஒதுக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்த வரலாறு கிடையாது. மத்திய அரசு மனிதாபிமானத்தோடு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமை.
இண்டியா கூட்டணி மீது விமர்சனம்: 26 கட்சிகள் உடன் சேர்ந்து இண்டியா கூட்டணி அமைத்துள்ளனர். பல்வேறு கருத்து வேற்றுமைகள் கொண்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டணியில் ஒன்றாக இணைந்துள்ளனர். அந்த கூட்டணியில் 19ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒரு புகைச்சல் வந்துவிட்டது. அந்த கூட்டத்தில், நிதீஷ்குமார் பேசும்போது இந்தியில் பேசுகிறார். அப்போது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறும்படி கேட்கிறார். அதற்கு மறுத்துவிட்ட நிதீஷ்குமார், வேண்டும் என்றால், இந்தி கற்றுக்கொண்டு வாருங்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுதான் இண்டியா கூட்டணியின் நிலை, இப்போதே புகையத் துவங்கிவிட்டது. எப்போது பார்த்தாலும், திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தமிழ், தமிழ் என்று பேசுவார். அங்கே ஏன் குரல் கொடுக்கவில்லை? இதுதான் திமுகவின் இரட்டை வேடம். அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
அதிமுகவின் பிரதமர் வேட்பாளர்: அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை, மக்கள்தான் எஜமானா்கள். மக்களுக்குக்காகத்தான் கட்சி, மக்களுக்காகத் தான் அரசாங்கம். பிரதமருக்காக அல்ல. தமிழக மக்கள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கு அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். எங்களுக்கு வாக்களித்த மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான எண்ணம்.
அதேபோல், தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். தமிழக வளர்ச்சிப் பெற வேண்டும். எனவேதான், அதிமுக பிரதமர் யார் என்று பார்க்கவில்லை. வாக்களிக்கும் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ஏதோவொரு கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அவர்களும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். தமிழக மக்களுக்கு விரோதமான செயல் அல்லது பாதிக்கப்படும் செயல்கள் வரும்போது, கூட்டணி தர்மம் என்ற நிலையில் அதை புறந்தள்ளிவிடுகின்றனர். அந்த சமயத்தில் நாம் பாதிப்படைகிறோம். இனி அந்த நிலை கிடையாது.
இன்றைக்கு தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரை, வாக்களிக்கும் மக்களே எஜமானா்கள். அந்த மக்களுக்கு தேவையானவற்றை, அதிமுக சார்பில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். அதிமுக ஆட்சியில் சுமார் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் காவிரி நதி நீர் பிரச்சினை வந்தது. அப்போது அதிமுக உறுப்பினர்களால் 22 நாட்கள் நாடாளுமன்றமே ஒத்திவைக்கப்பட்டது. இது அதிமுகவின் சாதனை. நீட் தேர்வு குறித்து பேசும் திமுகவுக்கு, நீட் தேர்வு விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தெம்பு, திராணி திமுகவுக்கு இருக்கிறதா? கிடையாது.
பாஜக கூட்டணியில் இல்லை: சிறுபான்மை மக்களை அரண் போல் காக்கும் கட்சி அதிமுக. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியபிறகு, முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கமே போய்விட்டது. காரணம், சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே, சிறுபான்மை மக்கள் வாக்குகள் சிதறிவிடும் என்ற அச்சத்தில், முதல்வர் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்.
முதல்வரே, நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். அதிமுக பாஜகவின் கூட்டணியில் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். ஏற்கெனவே, 25.9.2023 அன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு அது. அந்த முடிவின் அடிப்படையில் அதிமுக பாஜகவுடன் இனி கூட்டணியில் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். சிறுபான்மை மக்கள் விழித்துக் கொண்டார்கள். அதிமுகதான் அவர்களை அரண் போல காக்கும் கட்சி என்பதை உணர்ந்துகொண்டார்கள். இதனால், முதல்வர் ஸ்டாலின் பிதற்றிக் கொண்டிருக்கிறார். அச்சத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago