நெல்லை மாநகராட்சி நீரேற்று நிலையங்களில் சீரமைப்பு பணி - ஊராட்சிகளிலும் தொடங்குமா?

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர்த் திட்டக் கிணறுகளில் சீரமைப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளின் குடிநீர்த் திட்ட நிலையங்களில் சீரமைப்பு பணி எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் 15 தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 15 தலைமை நீரேற்று நிலையங்கள் மற்றும் பம்ப் அறைகளில் பொருத்தப்பட்டிருந்த பம்ப் செட்டுகள், பேனல் போர்டுகள், இணைப்பு மின் வயர்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு, அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக மாநகராட்சி பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான 19 லாரிகள் மற்றும் 22 மற்ற மாநகராட்சி லாரிகள் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் வழங்கி வருகின்றனர். தற்போது ஆற்றில் நீர் வரத்து குறைந்து வருவதால் போர்க்கால அடிப்படையில் கூடுதலாக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பழுதான நிலையில் இருந்த பம்ப் செட்டுகள், பேனல் போர்டுகள், பைப்லைன்கள், துண்டிக்கப்பட்ட மின் வயர்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 9 தலைமை நீரேற்று நிலையங்களில் குடிநீர் பம்ப் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் மாநகராட்சியின் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தச்ச நல்லூர், ஆகிய மூன்று மண்டலங்களில் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலப் பாளையம் மண்டலத்துக்கு விரைவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 6 தலைமை நீரேற்று நிலையங்களை ஆற்று வெள்ளம் அதிக அளவில் சூழ்ந்து இருந்த காரணத்தால் தற்போது தான் அவற்றை அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து நீரேற்று நிலையங்களிலும் சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும். அதுவரை பைப் லைன்கள் மூலம் குடிநீர் வழங்க இயலாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE