தூத்துக்குடி வெள்ளம் - 300 பிஎஸ்என்எல் கோபுரங்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழ்நாடு பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் டி.தமிழ் மணி நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள்கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேட்டரி, ஜெனரேட்டர் உள்ளிட்ட பல இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 399 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட கோபுரங்கள் பாதிக்கப்பட்டன.

தற்போது 82 சதவீதம் வரை சரி செய்யப்பட்டு, சேவை வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஆதி பரா சக்தி நகர், கிருஷ்ண ராஜபுரம், சிதம்பர நகர் தொலைபேசி நிலையங்களும், ஆழ்வார் திருநகரி, பெருங்குளம், வல்லநாடு, ஏரல், சாயர்புரம், தென்திருப்பேரை, பழைய காயல் தொலைபேசி நிலையங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன் படி 4 நாட்கள் செல்லத்தக்க கூடிய ரூ.200 இலவச டாக் டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இன்று (நேற்று) மாலை 4 மணி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பொது மேலாளர் பிஜூ பிரதாப், துணை பொது மேலாளர்கள் சாந்தி,ஆறுமுகசாமி, உதவி பொது மேலாளர் லிங்க பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE