7-வது தேசிய சித்த மருத்துவ தினம் மதுரையில் டிச.30-ல் கொண்டாட்டம்: மத்திய ஆராய்ச்சி குழும இயக்குநர் மீனாகுமாரி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரும், மத்திய சித்தமருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் பொது இயக்குநருமான (பொறுப்பு) ஆர்.மீனாகுமாரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அகத்திய முனிவர்பிறந்தார். அந்த நாள் ஆண்டுதோறும் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், வரும் டிசம்பர் 30-ம் தேதி (மார்கழி 14) ஆயில்ய நட்சத்திர நாளன்று மதுரையில் 7-வது ஆண்டு சித்த மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ‘பண்டைய ஞானம் - இன்றைய தீர்வுகள்’ என்பது இதன் கருப்பொருள்.

தமிழக, கேரள மாநில சித்த மருத்துவக் கல்லூரிகளின் பங்கேற்புடனும், அனைத்து சித்த மருத்துவர்களின் ஆதரவுடனும் மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த விழாவில் மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், துறை செயலர்கள், உயர் அதிகாரிகள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், சித்த மருத்துவ அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் ஆகியவை மாநில சித்த மருத்துவ இயக்குநரகத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை ‘சித்தா பைக் பேரணி’, சித்த மருத்துவத்தின் மைல் கற்கள் என்ற தலைப்பில் கண்காட்சி, மூலிகை பொருட்கள், அபூர்வ மூலிகை செடிகள் கண்காட்சி, சித்த மருத்துவ நூல்கள், மருத்துவ ஆய்வு இதழ்கள் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இது மட்டுமின்றி, சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் ஆலோசனை முகாம், மருத்துவ மாநாடு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முதியோருக்கான உடல்நல ஆலோசனை கலந்துரையாடல், பள்ளிமாணவர்களுக்கான உணவு, சுகாதாரம், கல்வி மேம்பாட்டுக்கான வழிமுறைகள் குறித்த சொற்பொழிவுகள், யோகாசன பயிற்சி பயிலரங்கு போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE