மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் - கடை விரித்தும் கொள்வாரில்லாத துறைகள்!

By ந.முருகவேல் 


விருத்தாசலம்: மாவட்டங்கள் தோறும் நடைபெறும், ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்புத் திட்ட முகாம்களில், பல்வேறு துறைகள் பங்கேற்றிருந்த போதிலும், சில துறைகளை மக்கள் அணுகவே இல்லை.

நகர்ப் புறங்களில் உள்ள மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன் மூலம் தீர்வுகாணும் வகையில் தமிழக அரசு, ‘மக்களுடன் முதல்வர்’ என்ற சிறப்புத் திட்ட முகாமை டிச. 18-ம் தேதி முதல் நடத்தி வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சில குறிப்பிட்ட வார்டுகளை ஒருங்கிணைத்து, அந்த வார்டுகளுக்கு அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் வருவாய், நகராட்சி நிர்வாகம், மகளிர் திட்டம், மின்சார வாரியம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, அதன் மீது தீர்வு கண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளுக்கான சிறப்பு முகாம்கள் 3 நாட்கள் வெவ்வேறு தேதிகளில் நடைபெற்றன. இந்த முகாமில் 2,504 மனுக்கள் நகர்ப்புற மக்களிடம் இருந்து பெறப்பட்டு, அதில் சிலவற்றுக்கு மட்டும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அந்த மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து பதில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மனு அளிக்க வந்த நகர்ப் புறமக்களில் பெரும்பாலானோர், வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், மின் வாரியம், மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளை நோக்கியே மனு அளித்தனர். இந்த முகாமில் சேவையை செய்ய காத்திருந்த மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளை நோக்கி வந்த மனுக்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவில் உள்ளன.

மாவட்டத் தொழில் மையம் மூலம், ‘பிரதான் மந்திரி உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்’ செயல்படுத்தப் படுகிறது. ‘இதற்காக 35 சதவீத மூல மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கப்படுகிறது. 18 வயது முடிந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி நிர்ணயம் இல்லை. ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான் அட்டை, வங்கி புத்தகம், கல்விச்சான்று, இயந்திர விலைப்புள்ளி உள்ளிட்டவை இருந்தால் மானியத்துடன் எளிய முறையில் கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தும், இந்த 3 நாள் முகாமில் 2 பேர் மட்டுமே மனு அளித்தனர். இதுதாண்டி, சிறு, குறுந்தொழில்கள் சார்ந்த எண்ணற்ற முறையீடுகளை மனுக்களாக தரலாம்.

இதே நிலை தான் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையிலும் நிலவியது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, மக்களிடம் இந்த துறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்களைப் பொறுத்தவரை மனு என்றால் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்பது, பட்டா பெயர் மாற்றம் செய்வது, நில அளவை முறையீடு, சாதி, வருவாய் சான்று சிக்கல்கள் போன்றவை குறித்த புரிதல் தான் உள்ளது.

மற்ற துறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் அரசின் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களை சென்றடையும். ஒரு சிலர் மட்டுமே இதனை அறிந்து, முழுமையாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் இதுபோன்ற முகாம்களுக்கு வராமல் நேரடியாகவே, தொடக்கத்திலேயே இதற்கான துறைகளை அணுகி அரசின் நலத்திட்டங்களை பெறுகின்றனர். இதனால் இதற்கான மனுக்கள் மிகமிகக் குறைவாக வருகின்றன” என்று அரசுதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“மாவட்ட தொழில் மையம் இந்த மனுக்களை பரிந்துரை செய்தாலும், இதில் உள்ள மிகப்பெரிய குறைபாடு வங்கிகள் கடன் கொடுப்பதில் நிலவும் கட்டுப்பாடுகள் தான். அதனாலேயே இதில் தயக்கம் காட்டுகின்றனர்” என்று பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். “முறையான, தெளிவான திட்ட அறிக்கையுடன் வந்தால், அந்த நபரின் நம்பகமான அணுகுமுறையை கொண்டு அரசு நிர்ணயம் செய்துள்ள முறைப்படி, எந்த ஒரு தொழில் கடனையும் வழங்க தயாராக இருக்கிறோம். மாவட்ட தொழில் மையம் அளிக்கும் பரிந்துரையையும் நாங்கள் கருத்தில் கொள்ளவே செய்கிறோம்” என்று வங்கி தரப்பில் தெரிவிக்கின்றனர்.

“இது போன்ற சிறப்பு திட்ட முகாம்களில், முதல்வர் காப்பீட்டுத் திட்ட உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அலுவலர்களை நியமித்து, அதற்காக மனுவையும் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வது தவிர்க்கப்படும்”என்றும் இந்த முகாம்களில் பங்கேற்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, செம்மைப்படுத்தி முகாம்களை நடத்தினால், இந்த ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்ட முகாம் சிறப்பாக மக்களைச் சென்றடையும். இல்லாதபட்சத்தில் ஒரு கண்துடைப்பு முகாமாக, ஏற்கெனவே வட்டாட்சியர், ஆட்சியர் அலுவலகங்களில் கொடுத்து நிலுவையில் இருக்கும் மனுக்களின் ‘ரிபீட்’ மனு கொடுக்கும் படலமாகவே மாறி விடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE