மின்வாரிய பணியாளர்கள் அயராது பணி - நெல்லை, தென்காசியில் 100% மின் விநியோகம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 100 சதவீதம் மின்விநியோகம் சீராகியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் மின் கம்பங்கள் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. மேலும் ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டிருந்தது.

இதுபோல் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் தடை செய்யப்பட்டிருந்தது. வெள்ளம் வடியத் தொடங்கியதில் இருந்து மின் விநியோகம் படிப்படியாக சீராகி வந்தது. ஆற்றங்கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு மக்கள் திரும்பியிருக்கும் நிலையில் அங்கெல்லாம் மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய வட்டாரங்கள் கூறும்போது, தென்காசி மாவட்டத்தில் பாதிப்பு கள் இல்லாத நிலையில் அங்கு மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக் குறிச்சி, வள்ளியூர் மின்வாரிய கோட்டங் களில் பாதிப்புகள் அதிகம் இருந்தது. சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் மின் பாதைகளை சீரமைக்கும் பணிகளில் கடந்த 6 நாட்களாக மின் வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மின்வாரியப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு பகலாக மேற்கொண்ட மின் சீரமைப்பு பணிகளால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் விநியோகம் 100 சதவீதம் சீராகியிருக்கிறது. திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிலர் கேட்டுக்கொண்டபடி அங்கு மின் விநியோகம் அளிக்கப்படவில்லை. மழையில் நனைந்த இந்த வீடுகளில் மின்கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மின் விநியோகம் அளிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE