தமிழக அரசின் கையிருப்பில் இருக்கும் நிதியில் நடந்த நிவாரண பணிகள் என்ன? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் கையிருப்பில் இருக்கும் ரூ.1,263 கோடி நிவாரண நிதியில் மேற்கொண்டநிவாரண பணிகள் என்ன என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நிர்வாக தோல்வியை மறைக்க காலங்காலமாய் திமுக பயன்படுத்தும், மத்தியஅரசின் மீது பழிபோடும் துருப்பிடித்துப்போன யுக்தியை, மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இந்த முறை ஏமாற மக்கள் தயாராக இல்லை. சென்னையில் கடந்த ஆண்டுகளாக ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு வந்ததாக கூறிய திமுக, 98 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று பொதுமக்களை நம்ப வைத்திருந்தார்கள். புயலின்போது பொதுமக்களின் கேள்வி ரூ.4 ஆயிரம் கோடி என்ன ஆனது என்பதே. நடைபெறாத பணிகளால் மக்களை வெள்ளத்தில் தத்தளிக்கவைத்ததற்கு திமுக அரசே முழு பொறுப்பு.

தென்மாவட்டங்களில் மிகக் கனமழைக்குவாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் 5 நாட்களுக்கு முன்பேதெரிவித்தும், எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்காமல் புறக்கணித்துவிட்டு, தற்போது வானிலை ஆராய்ச்சி மையத்தின் மீது குற்றம் சொல்கிறார் முதல்வர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், கடந்த ஆண்டுமத்திய அரசு வழங்கிய பேரிடர் நிவாரண நிதிகையிருப்பு ரூ.813 கோடி, இந்த ஆண்டுக்கான முதல் தவணை ரூ.450 கோடி என்று ஏற்கனவே தமிழக அரசிடம் ரூ.1,263 கோடி கையிருப்பில் உள்ளது. மேலும், இந்த ஆண்டுக்கான 2-வது தவணை ரூ.450 கோடியையும், மிக்ஜாம் புயல் தாக்கிய அடுத்த தினமே மத்திய அரசு வழங்கியது.

கையிருப்பில் இருக்கும் நிதியில் என்னநிவாரணப் பணிகளை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார், நிர்வாக தோல்வியால் பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிவிட்டு, மத்தியஅரசின் மீது பழிபோடும் போக்கை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE